Close
நவம்பர் 21, 2024 10:25 மணி

புத்தகம் அறிவோம்… ஜெயகாந்த நினைவுகள்.. கிருங்கை சேதுபதி

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம் ஜெயகாந்தன் நினைவுகள்- கிருங்கை சேதுபதி

“எழுத்துலகின் இமயத்தைத் தொட்ட படைப்புலக மேதை எழுத்து வேந்தர் ஜெயகாந்தன். எவருக்கும் தலைவணங்காத எழுத்து அவரின் எழுத்து. கதை,நாடகம் திரை இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் பரிணமித்த பல்துறை வித்தகர்”
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

” ஒரு கம்பர், ஒரு பாரதி, ஒரு ஜெயகாந்தன்தான். காட்டில் ஒரு சிங்கம்தான். அது ஜெயகாந்தன். நடிப்பில் சிவாஜியுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அது போல் எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் யாரையும் ஒப்பிட முடியாது. ”
நடிகர் சிவக்குமார்.

“ஜெயகாந்தன் இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல. அவருடைய எழுத்துகளே ஞானபீடம்தான்”
கவிஞர் வைரமுத்து.

“எழுத்துல சிற்பி ஜெயகாந்தன் மறைந்தாலும் அவர் எழுத்துகள் என்றென்றும் தமிழ்நெஞ்சங்களில் நிற்கும்.”
-கலைஞர் கருணாநிதி.
.இவைகள் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி வெளியிடப்பட்ட இரங்கல் செய்திகளில் சில…

கிருங்கை சேதுபதியின் “ஜெயகாந்த நினைவுகள்” ஜெயகாந்தன் அமரரான நிலையில், அவருடன் நெருங்கிப் பழகிய, அவர்தம் வாசகர்கள், நண்பர்கள், திறனாய்வாளர்கள், பத்திரிக்கையாளர்கள் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் எனசமுதாயத்தின் பல்வேறு அங்கத்தவர்களும் வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பு.

கிருங்கைசேதுபதியும் ஜெயகாந்தனின் நெருங்கிய வட்டத்தின் ஒரு உறுப்பினர்.

மரணத்திற்கு அப்பால்,
ஜெயகாந்தன் நினைவுகளில் நிறையும் ஆளுமை,
ஜெயகாந்தன் எழுத்தும் வாழ்வும்,
சபையின் நாயகர் ஜெயகாந்தன்,
ஜெயகாந்தன் என்றுமுள்ள இலக்கியவாதி,
நமது தோழர் ஜெயகாந்தன்,
ஜெயகாந்த தரிசனம்,
ஜெயகாந்தனெனும் பெருவெளியில் ,
ஜெயகாந்தன் தொடரும் வரலாறு , என்று ஒன்பது பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். 52 ஆளுமைகளின் கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளது.

புதுக்கோட்டையிலிருந்து அவருடன் நெருங்கிப் பழகிய செம்பை மணவாளன், ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தியின் நினைவலைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. செம்பை, தனக்கும் , ஜேகேவிற்கும் இருந்த தொடர்பையும், ஞானாலயா, தனக்கும் ஜேகேவிற்கும் இருந்த உறவையும், இவர்கள் இருவரும் மேடையை பகிர்ந்து கொண்ட நிகழ்வுகளையும், தனது நூலகத்திற்கு வருகை தந்து 5 மணிநேரம் இருந்ததையும், குறிப்பேட்டில் அவரைப்பற்றி எழுதிய செய்திகளையும் அழகாக நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.

ஜேகேயின் பல்வேறு பரிமானங்களை இந்நூலின் வழி அறியலாம். பல்வேறு இதழ்களில் வந்த இவ்வளவு செய்திகளையும் தேடி எடுத்து தொகுத்த சேதுபதி மிகவும் பாராட்டுக்குரியவர்.

ஜேகேயின் நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் மதுரை மீனாட்சி பதிப்பகமே இதையும் வெளியிட்டுள்ளது. 2017ல் ஜேகேயின் 82-ஆவது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. வெளியீடு..மீனாட்சி பதிப்பகம்,மதுரை.

# பேராசிரியர் விஸ்வநாதன்- வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top