Close
நவம்பர் 21, 2024 11:32 மணி

புத்தகம் அறிவோம்…நெருஞ்சி.. (வா.மு. கோமு)

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. நெருஞ்சி

திரைப்படம் எடுக்க வேணும் ஏதாவது நல்ல நாவல் சொல்லுங்க என்று தேடுகிற உதவி இயக்குநர்கள் அவசியம் அண்மையில் வெளியாகியுள்ள வா.மு. கோமுவின் நெருஞ்சி நாவலை வாசித்துப் பார்க்கலாம்.

நெருஞ்சி அப்பட்டமான கிராமத்துக் கதை; இனவரைவியல் நாவல்.ஆண்டிராய்டு அலைபேசியின் தொடுதிரைக்குள் கொப்பளிக்கிற கேளிக்கைக்குள் மூழ்கிடும் சூழலில், நிலம் சார்ந்த கதையாடலுக்கு இடம் இருக்கிறதா? யோசிக்க வேண்டியுள்ளது.

மெய்நிகர் வெளியில் மிதந்திடும் உடல்களில் இருந்து வெளியேறிடும் மனம் புனைந்திடும் புனைவுகளில் மண் வாசனையுடன் எழுதுகிற கதைசொல்லிகளில் வா.மு.கோமு வித்தியாசமானவர். கொங்கு நிலப்பரப்பில் பல்லாண்டுகளாக வாழ்கிற மக்கள் எதிர்கொண்டிருக்கிற பிரச்னைகளை முன்வைத்துக் கோமு சொல்கிற கதைசொல்லல் நெருஞ்சி நாவலாகியுள்ளது.

எண்பதுகளில் ஸ்கேன் என்ற கருவி மூலம் தாயின் கருவினில் இருக்கிற குழந்தையைக் கண்டறிந்து, பெண் எனில் அபார்ஷன் மூலம் அழித்தல் தமிழகமெங்கும் துரிதமாக நடைபெற்றது. அப்பொழுது தருமபுரி மாவட்டம், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி போன்ற இடங்களில் அதிக எண்ணிக்கையில் பெண் சிசுக் கொலை என்று செய்தி ஊடகங்கள் விமர்சித்தன.

ஆனால், இன்று 39 வயதாகியும் பெண் கிடைக்காமல் அல்லாடுகிற கொங்கு வாலிப வயோதிக ஆண்களைப் பார்க்கும்போது, கொங்கு மண்டலம் முன்னிலை என்று தோன்றுகிறது. கேரளாவிலிருந்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பெண்களை இறக்குமதி செய்து, திருமணம் செய்தல் குறித்த பிளக்ஸ் போர்டை நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் பார்த்திருக்கிறேன்.

வா.மு.கோமுவின் தானாவதி நாவலும் பெருமாள் முருகனின் கங்கணம் நாவலும் 40 வயதாகியும் திருமணத்திற்குப் பெண் இல்லாமல் திண்டாடுகிற கொங்கு ஆண்களின் துயரத்தை விலாவரியாகச் சித்திரித்துள்ளன.

சரி, இருக்கட்டும். கிராமம் என்ற மூடுண்ட அமைப்பு இன்னும் எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும் என்ற கேள்வி தோன்றுகிறது. குடும்பப் பாரம்பரியம், வம்சம் என்று மனிதர்களை அடையாளப்படுத்திடும் நிலை, இன்று சிதலமாகிக்கொண்டிருக்கிறது.

இன்னார் பேரன், இன்னார் மகன் என்று நெற்றியில் எழுதப்பட்டிருக்கிற வரிகளுக்குப் பின்புலமாக விளங்குகிற நிலம் பற்றிய மதிப்பீடுகள் அர்த்தமிழந்து விட்டன. வயலுக்குள் சாலை வீட்டில் தனித்து வாழ்கிறவர்கள், சமூகத்தைவிட்டு விலகி வாழ்கின்றனர்.

இன்னொருபுறம் நகரமயமாதலினால் உருவான தறிக்கொட்டகைகள், சாயப்பட்டறைகள் போன்றன எல்லா விழுமியங்களையும் சிதலமாக்கி விட்டன.நெருஞ்சி நாவலில் வா.மு. கோமு சித்திரிக்கிற ஐய்யம்பாளையம் கிராமம் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றங்களில் சில முக்கியமான அம்சங்கள்:

கிராமத்து விவசாய நிலம், வீட்டுமனையாக மாற்றி விற்பனைப் பொருளாகுதல்.நில உடமையாளர்களான விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்குகிற புரோக்கர் கும்பல்களின் அடாவடிச் செயல்கள், இளைஞர்கள் வரன் முறையற்று மது குடித்துவிட்டுப் பொறுப்பு இல்லாமல் திரிதல்.

உச்சிவெய்யிலில் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிற வேலை எதுவுமற்ற இளைஞர்கள்.பங்காளியின் நிலத்தைக் கைப்பற்றிட கூலிப்படை வைத்துக் கொலை முயற்சியில் ஈடுபடும் வசதியான நிலவுடைமையாளர்.பெண்களின் தனிப்பட்ட மனம் பற்றிய அக்கறை இல்லாத ஆண் மேலாதிக்கக் கும்பல்.
செண்பகம்- நல்லசிவம் இடையிலான சுறுசுறுப்பான காதல்.
சென்னிமலை, கோவில் பற்றிய வாய்வழிக் கதை பற்றிய விவரிப்பு.ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைச் செயல்கள். சரி, போதும். மீதியை நாவலின் பக்கங்களில் கண்டுகொள்க.தொடர்புக்கு:நாவல் வெளியீடு: நடுகல் பதிப்பகம். அலைபேசி எண்: 98654 42435.

# விமர்சகர் முனைவர் ந.முருகேசபாண்டின் #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top