Close
நவம்பர் 22, 2024 3:53 காலை

புத்தகம் அச்சிடப்பட்ட காகிதம் அல்ல.. முகம் தெரியாத மனிதனின் கைகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழா ஜூலை.28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.

6-ஆவது புத்தகத் திருவிழா லட்சக்கணக்கான புத்தகங்களுடன் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (ஜூலை.28)  தொடங்கியது.

வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற  தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியரும், புத்தகத் திருவிழாக்குழுத் தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார்.  புத்தகத் திருவிழாவை  மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாலையில்  பேக்கரி மஹராஜ் அருண்சின்னப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

புத்தகம் பள்ளியில் அறிமுகமானால் அது கொஞ்சம் தாமதமான அறிமுகம் ஆகிறது என்று அர்த்தம். ஆனால் வீட்டில் நல்ல புத்தகங்கள் அறிமுகமானால் உங்கள் பெற்றோர்கள் நீங்கள் புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்து வார்கள் என்றால் உண்மையில் நீங்கள் நல்ல குடும்பத்தின் பிள்ளையாக இருந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அப்போது எல்லோருக்கும் சிறுவயதில் புத்தகங்கள் வாங்க காசு கொடுப்பார்கள். அதில் சிறுவர் புத்தகங்களை நாங்கள் வாங்கிப்படிப்போம், அந்தப் புத்தகம் அச்சில் இடப்பட்ட காகிதம் அல்ல மாறாக புத்தகத்தின் வெற்று பக்கத்திலிருந்து முகம் தெரியாத ஒரு மனிதன் கைகளை நீட்டி கைகுலுக்கு வதைப் போல அரவணைத்துக்கொண்டதை உணர்ந்து கொண்டேன்.

எல்லா புத்தகங்களுக்கும் கைகள் இருக்கின்றன. உண்மையில் அவை எதைப் போன்ற கைகள். சில புத்தகத்தின் கைகள் ஆசிரியரின் கைகளைப் போன்றவை. அந்கப் புத்தகம் வழிகாட்டக்கூடிய கைகள். வழி தெரியாதவர்கள் சாலையைக் கடக்க உதவும் வழிகாட்டியாக சில புத்தங்கள்.

இன்னும் சில புத்தகங்கள் அன்னையின் கைகளைப் போன்றவை உங்களுக்கு என்ன தரவேண்டும் எதைத்தர வேண்டும். எவ்வளவு சுவையாகத்தர வேண்டும். .வாழ்நாளெல்லாம் உங்களுக்கு எப்போதும் உணவளித்தக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருணை ஒத்த கைகளைப் போன்றவை.  இன்னும் சில புத்தகங்கள் உற்ற தோழனைப் போன்றவை . தோழர்கள் எப்போதும் பேசிக்கொள்ளமாட்டார்கள், என் தோளில் அவன் கரம் இருந்தால் போதும் நெருக்கடியில் இருக்கும்போது என்ன உணர்கிறோம் என்றால். நீங்கள் எனக்கு பொருளுதவி வேண்டாம். பண உதவி வேண்டாம் உங்கள் பக்கத்தில் நான் இருந்தால்போதும்.

அப்படி நின்றவர் கைகள் உங்கள் மீது அரவணைத்துக் கொண்டால் போதும். துயர நினைவுகளில் துக்க நிகழ்வின் போது உங்கள் கைகளைப்பற்றி மௌனமாக கலந்தாய்வது போல சில புத்தகங்கள் என்னை ஆற்றுப்படுத்தின.

இன்னும் சில புத்தகங்கள் கைகள் குழந்தைகளின் கைகளைப் போன்றது. குழந்தைகளை காற்றில் எதையோ தேடுகின்றன. அந்தக்குழந்தைகள் கடவுளோடு பேசுகின்றன.கடவுள் குழந்தைகளுடன் பேசுகிறார். உலகிலேயே மனிதனுக்கு கிடைத்த வினோதமானது ஒன்று கைகள்தான். இந்தக் கைகள் இடைவெளியுடன் படைக்கப்பட்டு இருப்பது மற்றவர்களின் கைகளை பற்றிக் கொள்வதற்காகத்தான்.

இந்தக் கைகள் எந்த அன்பைத் தருகிறதோ எந்த உணவைத் தருகிறதோ எந்த நட்பைத் தருகிறதோ, எந்த ஆசையைத் தருகிறதோ அவை அத்தனையும் தருவது புத்தகங்கள்தான் என்றார் எஸ். ராமகிருஷ்ணன்.

இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் எஸ். தினகரன் பேசினார்.

விழாவில், புத்தகத் திருவிழாக்குழு மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அ. மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், த.விமலா, க.சதாசிவம், ஈ.பவனம்மாள்,கவிஞர் ஜீவி,கவிஞர் ராசி. பன்னீர்செல்வன், கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன்,கிருஷ்ண வரதராஜன், கவிஞர்  மு.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் மூலம் 120 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வாகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top