சென்னை மணலி அருகே பெயிண்ட் கிடங்கில் செவ்வாய்க் கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பெயிண்ட் எரிந்து நாசமானது.
சென்னை மணலி ஆண்டார்குப்பம் அருகே அகமது என்பவர் நடத்தி வரும் பிரீமியர் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. பல்வேறு வகையான பெயிண்டுகள் மொத்த விற்பனை செய்வதற்காக இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கிடங்கில் பெயிண்ட் இருப்பு வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீ பற்றியதாகக் கூறப்படுகிறது. பெயிண்ட் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதால் தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவத் தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த மணலி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர், மாதவரம், வியாசர்பாடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த சுமார் 10 தீயணைப்பு வாகனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னைக் குடிநீர் வாரிய லாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சி.பி.சி.எல் நிறுவனத்தில் சிறப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பெட்ரோலிய பொருள்களால் ஏற்படும் தீயை அணைக்கும் சிறப்பு ரசாயனம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
இதனையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதிக்கு உள்ளாயினர்.
தீயணைப்பு பணிகள் நடைபெற்றபோதே அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், வடக்கு மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் தென்னரசு உள்ளிட்டோர் பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டனர்
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மணலி காவல் நிலைய போலீஸார் தீ விபத்துக்கான காரணங்கள், சேத விபரங்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.