நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி, கொடும்பாளூர் ஊருணியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காந்தியவாதி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டத்தைச் சேர்ந்தது கொடும்பாளூர் சத்திரம். இங்குள்ள ஊருணியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற வேண்டும் எனக் கோரி கடந்த வாரம் திங்கள்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி என். செல்வராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் திங்கள்கிழமை மீண்டும் ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கையில் சிறிய வகை ஒலிபெருக்கியை வைத்துக் கொண்டு முழக்கங்களை எழுப்பிய அவருடன், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தினர்.
விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் எழுந்து சென்றார். அடுத்த வாரத்துக்குள் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் வருவேன் என்றும் அவர் கூறிவிட்டுச்சென்றார்.