Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்

புதுக்கோட்டை

உலக தாய்ப்பால் வாரவிழா பேரணியை தொடக்கி வைத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா 1.08.2023 முதல் 7.08.2023 வரை கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கிடைக்கப்பெறும் அரிய அமுதமாகவும் முதன்முதல் ஆகாரமாகவும் சிறப்புற்று விளங்குவது தாய்ப்பால் ஆகும். வேகமாக மாறி வரும் சமூகச்சூழல் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை மிகப்பெரிய சவாலாக மாற்றியுள்ளது.

பெண்மணிகள் பணிக்கு செல்லுதல், பெருகி வரும் அறுவைப் பிரசவங்கள், செயற்கை உணவுகள் காரணமாக மக்களி டையே தாய்ப்பால் சுரப்பு பற்றி தெளிவில்லாத தன்மை நிலவி வருகிறது.

இந்நிலையை மாற்ற தாய்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக, உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு இணைந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி முதல் 7 -ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழ் ஆண்டின்  கருப்பொருளாக ‘தாய்ப்பால் ஊட்டுதலை சாத்தியமாக்குவோம் – பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்” என்பதாகும். பணிபுரியும் பெண்கள் தாய்ப்பாலூட்டுவது மிக பெரிய சவாலாக உள்ளதால் சமுதாயத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்தில் தாய்பால் ஊட்டுதலுக்கு ஆதரவளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆண்டின் நோக்கமாகும்.

தமிழகத்தில் பிரசவங்கள் கிட்டத்தட்ட 100 சதவீதம் மருத்துவ மனையில் நடக்கின்றன. எனினும், பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக தாய்ப்பால் கொடுப்பவர்களின் எண்ணிக் கை 41.8 சதவீதமாகவே உள்ளது.

எனவே, பணிபுரியும் மற்றும் வீட்டிலிருக்கும் பெண்கள் என அனைவரும் பிறப்பு முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்து குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்ப டுத்த வேண்டியது அவசியமானதாகிறது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு (யுனிசெப்) அறிவுரையின்படி, குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் முக்கியமாக முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

மேலும், குழந்தை பிறந்தவுடன் 2 மணி நேரத்திற்குள் இயற்கை தடுப்பு மருந்தான சீம்பால் கொடுக்க வேண்டியது அவசிய மாகும். சீம்பாலை குடித்தால் மட்டுமே குழந்தையின் வயிற்றில் உள்ள கருப்பு மலம் முழுவதுமாக வெளியேறு வதோடு குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவதை தடுக்கும்.

ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க வேண்டும். இவ்வாறு தாய்ப்பால் மற்றும் இணை உணவு முறையாக பெற்ற குழந்தைகள் குள்ளத்தன்மை, மெலிவுத்தன்மை, எடை குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளரும்.

மேலும், தாய்ப்பால் உட்கொள்வதால் குழந்தைகள், கூர்ந்த அறிவுத் திறன் வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை பிற்காலத்தில் வருவதை தடுக்கிறது. தாய்ப்பால் புகட்டுவதால் தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பின் வரும் இரத்த கசிவு போன்ற ஆபத்து குறைகிறது.

தாய்ப்பால் மட்டும் புகட்டும் காலத்தில் அடுத்த கர்ப்பம் தரிப்பது தவிர்க்கப்படுகிறது. குழந்தைக்கும் தாய்க்கும் இடையே பாசப்பிணைப்பை உறுதிபடுத்துகிறது. மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் அமைந்துள்ளன.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தினை சிறப்பிக்கும் விதமாக  1.08.2023 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், செவிலியர் கல்லூரிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின் முதற்கட்டமாக உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்  மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்), மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், ஆகஸ்ட் 1 முதல் 7 வரை சிறப்பிக்கப்படும் இந்நிகழ் வில் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்று விழிப்புணர்வு பெற்று பயனடைய லாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தெரிவித்துள் ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top