Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

நம்முடைய வரலாறு என்ன என்பதை வாசிப்புதான் நமக்குக் காட்டும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசிய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

நாம் யார் நம்முடைய வரலாறு என்ன என்பதை வாசிப்புதான் நமக்குக் காட்டும் என்றார் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற சொற்பொழிவில், அவர் மேலும் பேசியதாவது:
கல்விக் கூடங்களில் இன்னும் மாற்றங்கள் வர வேண்டும். சமூகத்துக்கான சிறந்த மனிதர்களை கல்விக் கூடங்கள் உருவாக்குவதில்லை. சமூகத்துக்கும் கல்விக் கூடத்துக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது.

அறிவு என்பது வெளிச்சம். சாதி என்பது இருட்டு. வகுப்பறை யில் இருந்து வெளிச்சம் ஊருக்குள் பரவ வேண்டும். ஆனால், ஊருக்குள் இருந்த இருட்டு வகுப்பறைக்குள்ளும் வந்திருக்கிறது. சாதிப் பட்டையைக் கட்டிக் கொண்டு, ஆசிரியரை தாக்கச் செல்லும் மாணவர்கள் உருவாகியிருக் கிறார்கள்.

இப்போதெல்லாம் இளைஞர்கள் படிப்பதில்லை என பெரியவர்கள் நாம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். உண்மையில் பெரியவர்களும் படிப்பதில்லை, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் படிப்பதில்லை.

ஆனால், இளைஞர்கள் மீதான அதிகாரத்தின் காரணமாக நாம் இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். உண்மையில் வாசிப்பு குறைந்திருக்கிறது.
இதனை சரி செய்யத்தான் தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது. 5 ஆண்டுகள் கழித்து இதற்கான விளைச்சல் கிடைக்கலாம்.

குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்ற மனநிலையில் இருந்து கொண்டே, நாம் மாணவர்களுக்கு கல்வியைப் பயிற்றுவிக்க முயற்சிக்கிறோம். அவர்களின் தலையில் எதையாவது திணித்து அனுப்பும் வேலையைத்தான் கல்விக் கூடங்களில் செய்கிறோம். உண்மையில் அப்படியல்ல. மாணவர்கள் படைப்பூக்கம் மிக்கவர்களாகவே இருக்கிறார் கள்.

நூறு புத்தகங்களைப் படித்தால் நமக்கு சிறகுகள் முளைக்கும். அறிவுலகின் விண்ணில் நாம் பறக்க முடியும்.சரியான கல்வி என்பது சமூகத்தைக் கட்டுடைத்துப் பார்ப்பதுதான். காரல் மார்க்ஸும், அம்பேத்கரும், பெரியாரும் சமூகத்தைக் கட்டுடைத்துப் பார்த்தவர்கள்.

கல்வித் துறையில் வலுவான படைப்பூக்க வீரர்களாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள், அந்தத் துறையில் செயலர் முதற்கொண்டு அதிகாரிகளுக்கு கீழே பணியாற்றும் கடை நிலைப் பணியாளர்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் தலைகீழ் மாற்றம் வர வேண்டும்.

தனித்து இயங்கும் தன்மை கொண்ட மொழியாக நம்முடைய தமிழ் இருக்கிறது என்பதை கீழடி நமக்கு உணர்த்தியிருக் கிறது.  அதற்காக ஆதிமனிதனே தமிழன்தான் என்ற மிகையும் நமக்குத் தேவையில்லை. அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டவற்றைக் கொண்டு நம்முடைய பெருமைகளைக் கொண்டாடுவோம்.

நாம் யார், நம்முடைய வரலாறு என்ன என்பதை வாசிப்புதான் நமக்குக் காட்டும். வாசிப்புதான் ஆரோக்கியமான சமூகம் உருவாகுவதற்கும் உதவும் என்றார் தமிழ்ச்செல்வன்.
நிகழ்ச்சிக்கு, திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் சத்தியராம் ராமுக்கண்ணு,  ரோஸ் ஏ. ஆதப்பன், சாஸ்தா கோ. கிருஷ்ணன், ஏஎம்எஸ். இப்ராஹிம்பாபு உள்ளிட்டோ் கலந்து கொண்டனர். முனைவர் ஆர். ராஜ்குமார் வரவேற்றார். க. ஜெயராம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top