Close
செப்டம்பர் 20, 2024 1:20 காலை

ஆத்மா யோகா மையம் சார்பில் 22 ஆவது மாநில யோகாசன வாகையர் போட்டி

புதுக்கோட்டை

ஆத்மா யோகா மையம் நடத்திய 22-வது மாநில யோகாசன வாகையர் போட்டிகளில் பட்டம் வென்ற கரூர், திருப்பூர் மாவட்ட வாகையர்

ஆத்மா யோகா மையம் நடத்திய 22-வது மாநில யோகாசன வாகையர் போட்டிகளில் கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வாகையர் பட்டம் வென்றார்கள்.

புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் சார்பாக 22 -வது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டி – 2023 மஹராஜ் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொழில்முறை தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியர்கள் நலச்சங்கத் தலைவர் டாக்டர் மு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் பொதுப் பிரிவில் 834 போட்டியாளர்களும் சிறப்பு பிரிவில் 124 போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.

சிறப்பு வயது மற்றும் ஆண்கள், பெண்கள் பாலின அடிப்படையில் LKG முதல் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை கலந்துகொண்ட இப்போட்டி மொத்தம் 40 பிரிவுகளாக நடைபெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசுகளுடன் சான்றிதழ் வழங்கப் பட்டது.  பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழும், நினைவுப் பதக்கமும் வழங்கப் பட்டது.

புதுக்கோட்டை
ஆத்மா யோகா மையம் சார்பில் நடைபெற்ற வாகையர் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

ஆண்கள் பிரிவில் மூன்று சேம்பியன் பட்டமும், பெண்கள் பிரிவில் மூன்று சேம்பியன் பட்டமும், ஆண்கள் பிரிவில் கரூர் மாணவன் அஜய்குமார் வாகையர் பட்டமும். பெண்கள் பிரிவில் திருப்பூர் மாணவி தேவிஸ்ரீ ஆகியோர் வாகையர் பட்டத்துடன் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், முன்னாள் நகர்மன்ற தலைவர் திவ்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

விழாவில் ஒன்றியப் பெருந்தலைவர் கே.ஆர்.என்.போஸ், தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.ஜெயகுமார், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க தலைவர் மோகன்ராஜ், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், மகாத்மா ரவிச்சந்திரன், சேது கார்த்திகேயன், இயற்கை ஆர்வலர் பழ.கண்ணன், சுந்தரவேல்,  நகர்மன்ற உறுப்பினர் மை.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

ஏற்பாடுகளை ஆத்மா யோகா மைய நிறுவனர் யோகா ரெ.பாண்டியன், செயலாளர் புவனேஸ்வரி பாண்டியன். புதுக்கோட்டை மாவட்ட சங்க நிர்வாகிகள் மனோகர், அருண், அமுதா, அன்பரசன், அ.பாண்டியன், சங்கரநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.

வெற்றி பெற்றவர்களை பள்ளி முதல்வர்கள், யோகா ஆசிரியர்கள், நடுவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top