புதுக்கோட்டை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 3-ஆம் காலாண்டு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை விஜய் பேலஸ் அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 3-ஆம் காலாண்டு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா அவர்கள் தலைமையில் (08.08.2023) நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களது பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளுடன், மக்களுக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதனடிப்படையில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிறப்பு முகாம், 07.08.2023 முதல் 12.08.2023 வரையிலும், இரண்டாவது சுற்று 11.09.2023 முதல் 16.09.2023 வரையிலும் மற்றும் மூன்றாம் சுற்று 09.10.2023 முதல் 14.10.2023 வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இம்முகாம்களில் உங்களது ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை ஊராட்சி மன்றத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் அம்மை தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அனைத்து குழந்தை களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ள காலை உணவுத் திட்டத்திற்காக புதிதாக 220 சமையலறைக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் முடித்திடவும், குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தினை சிறப்பாக நடத்திடவும், பெண்களை தலைவர்களாக கொண்ட அனைத்து ஊராட்சி மன்றங்களிலும், பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு தங்களது ஊராட்சியினை அனைத்து வசதிகளையும் கொண்ட தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், ஊராட்சி நிர்வாகத்தால் திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தி தூய்மையான ஊராட்சியாக விளங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், அரசின் திட்டங்கள் மூலமாக புதிய தொழில் தொடங்கு வதற்கான வழிமுறைகள் குறித்தும், அதற்குண்டான வங்கி கடனுதவிகள் குறித்தும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, அரசின் திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ஊராட்சிமன்றத் தலைவர்கள் கிராமப் புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா .
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) திரு.இளங்கோ தாயுமாணவன், உதவித் திட்ட அலுவலர் திரு.கணபதி, ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.