Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

ஆபத்தான ஆழ்துளை கிணறுகள், கட்டுமான குழிகள்: பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்

தஞ்சாவூர்

ஆபத்தை விளைவி்க்கும் ஆழ்துறை கிணறுகள் அருகே வேலை அமைக்க வேண்டும்

ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமானகுழிகள் அருகில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் வெளியிட்ட தகவல்:

மாவட்டங்களில் திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரிகுழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் குறிப்பாக நமது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன், சிலஉயிரிழப்புகள் நிகழவும் காரணமாக அமைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள  தலைமைச்செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்.

அந்தவகையில் தஞ்சாவூர்மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகுழிகள், திறந்த வெளிகிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்த வெளிகிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிறதொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டபகுதிகளில் சாத்தியமான அபாயங்களைக் குறைக்க, அனைத்து திறந்த வெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறு களையும் திறம்பட பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொருதிறந்த கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தல் மற்றும் இதேபோல், செயலிழந்த ஆழ்துளைகிணறுகள், குறிப்பாக குழந்தை களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் வகையில் இவைகளைக் கண்டறிந்து உடனடியாக மூடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும், கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு    இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கையாக கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில், கட்டுமானக்குழிகள் மற்றும்அகழிகளை வலுவான தடுப்பு களை அமைத்திடவும், அவை ஓட்டுநர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட அபாயகரமான இடங்களுக்குஅருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டஆட்சியர்  தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top