Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

திருவண்ணாமலையில் மக்கள் நீதிமன்ற விசாரணையில் 235 வழக்குகளில் ரூ.3.19 கோடிக்கு தீர்வு

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணை

மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார். தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.

காப்பீட்டு கழக வழக்கறிஞர் சாபுதீன் வாழ்த்தி பேசினார். இதில் அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கியில் விவசாய கடன், கல்வி கடன் பெற்ற வாராக் கடன் வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.

இதே போல், போளூர் வந்தவாசி ஆரணி செய்யாறு ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவின் அமர்வுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 1,455 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில் 235 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.3 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 797 இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் முதன்மை சட்ட ஆலோசனை வழக்கறிஞர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top