Close
நவம்பர் 21, 2024 9:23 மணி

புத்தகம் அறிவோம்… உலகக் காதல் கதைகள்.. ந. முருகேசபாண்டியன்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. உலக காதல் கதைகள்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்க்கையை எப்படியாவது அர்த்தப்படுத்திட முடியாதா என்ற ஆதங்கத்துடன் செயல்பட்ட எனக்குப் புத்தகங்கள் பெரிதும் உதவின. கொடுங்கனவில் இருந்து விடுபட செவ்வியல் இலக்க்கியப் படைப்புகளில் மூழ்கினேன். அப்பொழுது தோன்றிய எண்ணம்தான் உலகக் காதல் கதைகள். சரி, இருக்கட்டும்.

என்னுடைய பதின் பருவத்தில் மொழிபெயர்ப்பு நாவல்கள், சிறுகதைகளை ஆர்வத்துடன் வாசிக்கத்தொடங்கியது இன்றைக்கும் தொடர்கிறது. ரஷியன், பிரெஞ்சு உள்ளிட்ட மேலை நாட்டு இலக்கியப் படைப்புகள் எனக்குப் புதிய உலகை அறிமுகம் செய்தன.

நாடு, மொழி, இனம் கடந்த நிலையில் சகமனிதர்கள் மீதான நேசமும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான காதலும் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானவை. குறிப்பாகக் காதலை முன்வைத்துப் பிற மொழிகளில் வெளியான கதைகளைத் தேர்ந்தடுத்துத் தமிழ் மொழிபெயர்ப்பில் பிரசுரமான சிறுகதைகள், எனக்குள் உறைந்துள்ளன. அந்தக் கதைகளை இளம் வாசகர்களும் வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடுதான் ‘உலகக் காதல் கதைகள்’

கடந்த எண்பது ஆண்டுகளில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அயல்நாட்டுக் கதைகளில் இருந்து பதினான்கு கதைகள் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. 1853-ஆம் ஆண்டு பிரசுரமான பால்வான் ஹெய்ஸேயின் ‘காளி’ கதை முதலாக 2017 -இல் வெளியான வெளியான மனுஷா பிரபானி திஸா நாயகவின் ”பின்தொடர்தல்’ கதை வரையிலான கதைகளை மறுவாசிப்புக்குட்படுத்தும்போது செவ்வியல்தன்மைக்கு அப்பால் காதல் படுத்துகிற பாடுகளை அவதானிக்க முடிகிறது.

லேவ் தல்ஸ்தோய், லாஜாஸ் பிரோ, பேர் லாகர் க்விஸ்ட், மார்கெரித் யூர்ஸ்னர், மக்சீம் கோர்க்கி, வில்லியம், ஸரோயன், வசீலி ஷூக்ஷுஷீன், பரீஸ் பொலிவோய், பால்வான் ஹெய்ஸே, கிரேஸியா டெல்டா, காஷாக் ஜியுல்நஸாரியன், அலெக்சாந்தர் குப்ரின், ரேமண்ட் கார்வர், மனுஷா பிரபானி திஸா நாயக உள்ளிட்ட பதினான்கு இலக்கிய ஆளுமைகளின் மேதைமை, காதல் கதைகளின் ஆக்கத்தில் வெளிப்பட்டுள்ளது.

பிற மொழிகளில் இருந்து இருந்து கதைகளைத் தேர்ந்தெ டுத்துத் தமிழாக்கிய பூ. சோமசுந்தரம், புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் க.நா.சுப்ரமணியன், எஸ்.ராஜா, நா.முகமது செரீபு, ஜி.குப்புசாமி, நா.தர்மராஜன், ஜனகநந்தினி, எம்.ரிஷான் ஷெரீப் போன்றோரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்தான் ‘உலகக் காதல் கதைகள்’ புத்தக உருவாக்கத்தின் ஆதாரமாக விளங்குகின்றன.
.
மனித மனத்திற்கு மிகவும் நெருக்கமான காதல், படைப்பாளர் களின் மனதில் காலந்தோறும் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. ‘மலரினும் மெல்லிது காமம்’ என்கிறார், திருவள்ளுவர். காதல் கதைகள் எழுதப்பட்டுப் பல்லாண்டுகள் கழிந்த பின்னரும், நாடு, மொழி, பண்பாடு போன்றவற்றுக்கு அப்பால் இன்றைக்கும் காதலின் ஈரத்துடன் ததும்புகின்றன.
தொடர்புக்கு: டிஸ்கவரி புக் பேலஸ்,அலைபேசி எண்: 8754507070.

தமிழ்நாடு

#தொகுப்பு-

முனைவர் ந. முருகேசபாண்டியன்

# 9443861238 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top