குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியினை தொடக்கி வைத்து,தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் தினத்தினை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியினை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி (17.08.2023) தொடக்கி வைத்தார்.
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினம் ஒவ்வொரு ஆண்டும் இரு சுற்றுக்களாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. முதல் சுற்று 14.02.2023 அன்று கடைபிடிக்கப்பட்டு, 1-19 வயதுடைய 5,13,760 குழந்தைகளுக்கும், 20-30 வயதுடைய 1,22,177 மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் சுற்று இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1-19 வயதுடைய குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் குடற் புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு 24.08.2023 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி) மற்றும் 2 முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயது வரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் (400 மி.கி) வழங்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, தேசிய குடற் புழு நீக்க நாள் உறுதிமொழியான, வருடத்திற்கு இருமுறை குடற் புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம் உருண்டைப்புழு, கொக்கிப் புழு, நாடாப் புழு தொற்றினை ஒழிக்க முடியும் என்று அறிவேன். குடற் புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால் உடல் வளர்ச்சி, அறிவு திறன், நோய் தொற்றிற்கான எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கும் என்பதையும் நன்கு அறிவேன். நானும், எனது சுற்றத்தினரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் என்றும்,
சுகாதார கழிவறையை உபயோகிப்போம் என்றும், சாப்பிடும் முன்னும் பின்னும் கைகளை சுத்தமாக கழுவுவோம் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம் என்றும், குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதின் மூலம், குடற் புழு தொற்றில்லா, இரத்த சோகை இல்லா தமிழ்நாடு மற்றும் வளமான அறிவாற்றலுள்ள எதிர்கால சந்ததியினர் உருவாக ஒத்துழைப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியினை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி வாசித்தார்.அவரைத் தொடர்ந்து, அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் வாசித்தனர்.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), தலைமையாசிரியர் ச.சுசரிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.