Close
நவம்பர் 21, 2024 11:49 மணி

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வணிகவரித்துறை பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

விருதுநகர்

சிவகாசியில் அரசு ஊழியர் பணிடை நீக்கம்

சிவகாசியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வணிகவரித்துறை பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதேவி (36). இவருக்கும், சிவகாசி வணிகவரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சித்ராதேவி (35) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாண்டிதேவியுடன் நட்புடன் பழகிய சித்ராதேவி, தங்களது அலுவலகத்தில் ஒரு பணியிடம் காலியாக இருப்பதாகவும் அதில் நீங்கள் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் அப்போது தான் பணி நியமன ஆணையை தருவார்கள் என்றும் சித்ராதேவி கூறியுள்ளார். இதனை நம்பிய பாண்டிதேவி, பல தவணைகளாக 4 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாயை சித்ராதேவியிடம் கொடுத்துள்ளார்.

பணம் பெற்ற சித்ராதேவி, பணி நியமன ஆணை என ஒரு கடிதத்தை பாண்டிதேவியிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற போது தான், சித்ராதேவி கொடுத்தது போலியான பணி நியமன ஆணை என்று தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டிதேவி, சித்ராதேவியிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.

ஆனால் பணத்தை திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி வந்தார். இது குறித்து பாண்டிதேவி, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட சித்ராதேவி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து வணிகவரித்துறை அதிகாரிகள் சித்ராதேவியை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top