கருணை கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி கிராமத்து தலையாரி ஒருவர் குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் பூவரசகுடி கிராமத்தின் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அன்சாரி தன்னையும் தனது குடும்பத்தின ரையும் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த நான்கு மாத காலமாக தனக்கு சம்பளம் வழங்க வில்லை என்றும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் குடும்பம் நடத்த கூட முடியாத சூழலுக்கு தான் தள்ளப்பட்டுள்ளேன்.
கடன் வாங்கி நான்கு மாத காலமாக செலவு செய்து வருகிறேன். இனி குடும்ப நடத்த வழியில்லாத சூழலில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குடும்பத்துடன் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அவரை சமாதானம் செய்த போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு அளிக்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சம்பந்தப்பட்ட அன்சாரி முறையாக பணிக்கு வருவதில்லை என்றும் வேறு வேலைக்கு சென்று விடுவதால் அவருக்கு சம்பளம் வழங்குவதில் சில சிக்கல் ஏற்பட்டது என்றும், எனினும் இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.