Close
செப்டம்பர் 20, 2024 1:22 காலை

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் பெண்கள் மனு

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 8 மாத காலத்திற்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்பவளக்குடி கிராமத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை கடந்த 8 மாதத்திற்கு முன்பு நீதிமன்ற உத்தரவுபடி மூடப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதி பெண்களும் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு நீதிமன்ற உத்தரவுப்படி அந்த கடையை அதிகாரிகள் திறந்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக சம்பந்தப்பட்ட கடையை தற்காலி கமாக அதிகாரிகள் மூடி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த கடையை திறந்ததால் மீண்டும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக கடை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் மனுவையும் அளித்துள்ளனர்.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில்:தங்கள் கிராமத்தில் அரசு மதுபான கடை இருப்பதால் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதுமட்டுமின்றி மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகினர். இதனால் தங்கள் கிராம மக்கள் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக கடை 8 மாத காலத்திற்கு முன்பு மூடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அந்த கடையை திறக்க அதிகாரிகள் மற்றும் தங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர் முயல்வதாகவும் இதற்கு ஒருபோதும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அரசு மதுபான கடையை திறந்தால் மீண்டும் தங்கள் கிராமத்து பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top