Close
நவம்பர் 22, 2024 8:02 காலை

புத்தகம் அறிவோம்… நான் கண்ட சுப்பிரமணிய சிவம்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

அந்தக் காலத்தில் சிறைபட்ட தேசபக்தர்கள் என்னென்ன மாதிரியான துன்பங்களை அனுபவிக்க நேர்ந்த தென்பதைப் பற்றி சிவனார் வாயிலாகவே அறிந்துகொண்டேன். செக்கிழுத்தல், மாவரைத்தல், கம்பளி நெய்தல், துணி நெய்தல் இவை போன்ற வேலைகளே கொடுக்கப்பட்டன என்று கேட்டு திடுக்கிட்டேன்.

தேசபக்தர்கள் பொது ஜனங்கள் மத்தியில் எவ்வளவுக்கு எவ்வளவு மதிக்கப்பட்டார்களோ அவ்வளவுக்கவளவு அதிகமாக சிறையில் அவமதிக்கப்பட் டார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.அப்படிப்பட்ட தியாக வீரர்களை நாம் மறக்கலாமா? அவர்களை வருஷத்திற் கொரு தடவையாவது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டாமா? பக்.27.

சிவானார் தம் சிறை அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ள குறிப்பு..
கைதிகள் சிறைக்குள் சென்றதும் முழு மொட்டையாக ஷவரம் செய்துகொண்டு விட வேண்டும். அங்கு சாதாரண கைதி, சரீரத்தின் எந்த பாகத்திலும் அரையங்குலத்துக்கு மேல் நீளமுள்ளதாக ரோமம் வளரவிடக்கூடாதென்பது வைத்திய விதி. ரோமம் அதிகமாக வளர்ந்துவிட்டால் அழுக்குப் படிந்து நோய் உண்டாகிவிடுமாம்.

ஷவரம் செய்வதற்கு உபயோகப்படுத்தப்படும் கத்திகள் சாணை பார்க்காத வெறும் இரும்புத்தகடுகள். ஷவர தினத்தன்று படும் கஷ்டம் இவ்வளவென்று சொல்லமுடியாது. அதிலும் என்னைப் போன்ற முரட்டு ரோமம் உள்ளவர்கள்…! ஷவரம் செய்துகொள்வதை விட எந்த வேலையும் செய்யலாம்! மரண வேதனையும் அனுப்பவிக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமைதோறும் ஷவரம் செய்துகொள்ளும் போது என் சரீரம் செத்துப்பிழைக்கும்…. ஷவரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் சிறைவாசத்தைப் போல் சுகவாசம் இல்லவே இல்லையென்று சொல்லுவேன்” பக்27.

‘சிவம் பேசினால் சவம்கூட எழுந்துவிடும்’ என்று அவருடைய பேச்சாற்றலைப் பற்றிய சொல் உண்டு. நல்ல வலிமையான தேகம் படைத்தவராகச் சொல்லப்படும் சுப்பிரமணிய சிவமே சிறைவாழ்க்கையைப் பற்றி இப்படிச் சொல்கிறார் என்றால் அன்றைய சிறைவாழ்க்கை எவ்வளவு கொடுமையானது. (இன்றைய சிறை வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நெற்றியில் குங்குமப்பொட்டோடு புன்னகை தவழ சிறையிலிலிருந்து வெளிவரும் நம்மவர்களைப் பார்த்தாலே தெரியும்)

வாழ்ந்த 41 ஆண்டுகளில், தேசபக்தியை பரப்ப பேசியதற்காக நான்கு ஆண்டுகள் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து, பாரதமாதாவிற்கு ஒரு கோயில் கட்டவேண்டுமென்ற ஆசை நிறைவேறாமல் மரித்துப்போன மாமனிதர் சிவம்.
பாரதி, வ.உ.சி. ஆகியோருடன் சமகாலத்தில் பயணித்தவர். தேசத் தொண்டோடு தமிழுக்கும் வ.உ.சி. போல தொண்டாற்றியவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சி பொங்க வடித்திருக்கிறார் சர்மா இந்த நூலில். வெளியீடு: வளர்பிறை பதிப்பகம்-9884967484.

# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top