Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

தஞ்சை மாவட்டத்தில் காலை உணவுத்திட்ட விரிவாக்கம்.. பயன் பெறும் 53,518 மாணவர்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் காலை உணவுத்திட்டத்தை தொடக்கி வைத்த எம்பி. பழனிமாணிக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும். ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 ன் கீழ் சில மாநகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேலைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வரால் 16.09.2022 அன்று மதுரையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 16 பள்ளிகளிலும் கும்பகோணம் மாநகராட்சியில் 21 பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள நற்பயனை கருத்தில் கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 13.01.2023ம் நாளிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகைகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு 25.08.2023 இன்று நாகப்பட்டிணம் மாவட்டம், திருக்குவளையின் இத்திட்டம் முதமைச்சர் தொடக்கி வைத்தார்.

அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 1087 தொடக்கப் பள்ளிகளிலும், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள 16 நகராட்சி பள்ளிகளிலும், அதிராம்பட்டினம் நகராட்சி பகுதிகளில் உள்ள நகராட்சி பள்ளிகளிலும், மேலும் கும்பகோணம் மாநகராட்சியில் ஏற்கெனவே செயல்படுத்தப் பட்டுவரும் பள்ளிகளுடன் புதிய பள்ளியினையும் சேர்த்து ஆக கூடுதலாக 1112 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 53518 மாணவ, மாணவியர்களுக்கு 25.08.2023 முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரக பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமும், நகராட்சி பகுதிகளில் தொடர்புடைய நகராட்சி ஆணையர்கள் மூலமும் செயல் படுத்தப்படும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது,

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், மாரியம்மன் கோயில் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் , மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் , தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)எச்.எஸ்.ஸ்ரீகாந்த், ஆகியோர் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்வில், ஒன்றிய குழு தலைவர் வைஜயந்தி மாலா கேசவன், திட்ட இயக்குனர்(மகளிர் திட்டம்) சாந்தி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், பொற்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top