Close
செப்டம்பர் 20, 2024 3:43 காலை

எண்ணூர் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படும்

சென்னை

காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா

ரூ.156 கோடி செலவிலான எண்ணூர் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படும்  எனகாமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா தெரிவித்தார்.

காமராஜர் துறைமுகம் நிதி உதவியுடன் ரூ.156 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணூர் முகத்து வாரம் தூர்வாரும் பணிகள் திட்டமிட்டபடி குறித்த காலத்திற் குள் செய்து முடிக்கப்படும் என காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஜே.பி. ஐரீன் சிந்தியா நேற்று தெரிவித்தார்.

நாட்டின் 12 பெருந்துறை முகங்களில் எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம் மத்திய அரசு, சென்னைத் துறைமுகம் ஆகியவற்றின் கூட்டாண்மை நிறுவனமாக தொடங்கப்பட்டது.   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் பங்கினை முழுமையாக சென்னைத் துறைமுகம் வாங்கியதையடுத்து தற்போது சென்னைத் துறைமுகத்தின் துணை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.

இத்துறைமுகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக சென்னைத் துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவாலே இருந்து வந்த நிலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக ஜே.பி.ஐரீன் சிந்தியா மத்திய அரசால் நியமிக்கப்பட்டதையடுத்து அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.   இந்நிலையில் துறைமுகத்தின் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஐரீன் சிந்தியா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

அப்போது ஐரீன் சிந்தியா கூறியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி கையாள்வதற் காக 1999-ம் ஆண்டு 2 கப்பல் தளங்களுடன் தொடங்கப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுகம் படிப்படியாக வளர்ச்சியடைந்து தற்போது 8 கப்பல் தளங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 55 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட இத்துறைமுகத்தில் கடந்த ஆண்டு 44 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. மேலும் ஒரு புதிய கப்பல் தளத்தை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தளம் செயல்பாட்டிற்கு வரும்போது மேலும் 3 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கூடுதலாகக் கையாள முடியும்.

முகத்துவாரம் தூர்வாரும் பணி:
காமராஜர் துறைமுகத்தின் அருகாமையில் அமைந்துள்ள கிராமங்களின் மேம்பாட்டில் குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணூர் முகத்துவாரம் தூர்வாரும் பணி தமிழக பொதுப்பணித்துறை மூலம் காமராஜர் துறைமுகத்தின் ரூ.156 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

 இதற்கான திட்டப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நிதி ஒதுக்கீட்டில் எவ்வித சுணக்கமும் இல்லாததால் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.   இதனால் முகத்துவாரம் அகழப்படுத்துதல், உள்பகுதியில் ஆழப்படுத்துதல், மணல்மேடுகள் உருவாகாமல் தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்படும்.

இப்பணிகள் முடிவடைந்தபின் மீனவர்கள் தங்களது படகுக ளில் தங்கு தடையின்றி கடலுக்குச் சென்று வர முடியும். இதன் மூலம் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்.  மேலும் பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப் படும் மழைநீர் தடையின்றி கடலுக்குச் செல்லும். செயல் பாடுகளில் எட்டிய சர்வதேச அளவீடுகள்:

இத்துறைமுகத்தில் அதிக சரக்குகளை ஏற்றிச் செல்லும் பெரிய கப்பல்கள் வந்து செல்வதற்கு வசதியாக 15 முதல் 16 மீட்டர் ஆழப்படுத்திடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.  கப்பல்கள் துறைமுகத்திற்கு உள்ளே வருவதற்காக  காத்திருப்பது, சரக்குகளை கையாள்வதில் எடுத்துக் கொள்ளும் நேரம் உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளுக்கு இணையாக காமராஜர் துறைமுகத்தின் திறன் உள்ளது.

 துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்காக தொடங்கப்பட்ட வடக்கு இணைப்பு சாலை திட்டத்தின் இரண்டு கட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது, தமிழக அரசு சார்பில் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் வெளிவட்டச் சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் இப்பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.  ரயில்கள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எரிசக்தி துறைமுகம்:
துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளில் சுமார் 60 சதவீத பொருள்கள் நிலக்கரி,  இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு,  பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்ட எரிபொருள் வகையை சேர்ந்தவைகள் என்பதால் இத்துறைமுகம் எரிசக்தி துறைமுகம் என போற்றப்படுகிறுத.  நிறுவன சட்டங்களின் அடிப்படையில் கட்டமைப்பு பட்டுள்ள காமராஜர் துறைமுகம் தற்போது சென்னை துறைமுகத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் நிபுணத்துவம் கொண்ட அலுவலர்கள், திறமை வாய்ந்த ஊழியர்கள் மூலம் இத்துறைமுகத்தின் செயல்பாடுகள் தனித்துவமாக இருக்கும்.  இத்துறைமுகத்தில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம்தான் பெரும்பான்மையான கப்பல் தளங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.  மேலும் இந்நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் காமராஜர் துறைமுகம் எவ்வித தொய்வும் இன்றி அளித்து வருகிறது.

சமூக நலத் திட்டங்கள்:
துறைமுகத்தின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது.   துறைமுகத்தின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் பசுமையை அதிகரிக்கும் வகையில் புதிய மரங்கள் நடவு செய்யப்பட்டு பின்னர் வளரந்த காடுகளாக மாற்றியமைக்கப்படும்.  பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இப்பகுதி மக்களின் மேம்பாட்டிற்காக பள்ளி கட்டடங்கள், மருத்துவமனை கட்டடங்கள், விளையாட்டு மைதாங்கள், மருத்துவ உபகரணங்கள்,  சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு காமராஜர் துறைமுகம் தாராளமாக நிதி உதவி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  காமராஜர். துறைமுகத்தில் வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையில் துறைமுகத்தின் பல்வேறு பணிகளில் இப்பகுதியைச் சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது,

தனியார் துறைமுகங்கள்:
காமராஜர் துறைமுகத்திற்கு அருகாமையில் காட்டுப்பள்ளி, கிருஷ்ணபட்டனம் உள்ளிட்ட இடங்களில் தனியார் துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன.  தற்போதைய நிலையில் தனியாருடனான போட்டி என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல துறைமுகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாகவும் உள்ளது. காமராஜர் துறைமுகம் தொடங்கப்பட்ட காலம் முதல் இத்துறைமுகத்தின் வளர்ச்சி என்பது ஏறுமுகத்தில்தான் உள்ளது. மேலும் தனியார் துறைமுகங்களுடன் போட்டியிட்டு வெல்லும் திறன் கொண்ட துறைமுகமாக காமராஜர் துறைமுகம் தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது.   மேலும் இந்தியாவின் பன்னாட்டு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடலோர நீர்வழி உள்நாட்டுப் போக்குவரத்து துறையிலும் தொடர்ந்து வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.  இதற்கேற்ப துறைமுகங்களின் தேவையும் அதிகரித்தே வருவதால் தனியார் துறைமுகங்களின் வருகை என்பது பெருந்துறைமுகங்களின் வளர்ச்சியில் தடையாக இருக்காது. எனவே காமராஜர் துறைமுகத்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவே உள்ளது என்றார் சிந்தியா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top