Close
ஜூலை 7, 2024 10:43 காலை

வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல்

சென்னை

திருவொற்றியூரில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கும் திட்டத்திற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

வடசென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள் கட்டுவதற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் திருவொற்றியூர் மற்றும் ராயபுரத்தில் சுமார் 105 கோடி மதிப்பீட்டில் 576 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அமைக்கும் திட்டங்களுக்கு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

திருவொற்றியூர் கிராமத் தெரு பகுதியில் 1995-ஆம் ஆண்டு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட வீடுகள் சிதிலடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதிலிருந்து சுமார் 12 வீடுகள் திடீரென தானாகவே இடிந்து விழுந்தன. இதனையடுத்து குடியிருப்பில் இருந்த மொத்தம் 336 வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

மேலும் இதே இடத்தில் புதிய வீடுகளை அமைத்து தர அரசு உறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இங்கு ரூ. 60 கோடி செலவில் 6 அடுக்குகள் கொண்ட 336 வீடுகள் அமைக்கப்பட உள்ளது. இதே போல ராயபுரத்தில் செட்டி தோட்டம் பகுதியில் 1993-ம் ஆண்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 240 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்ததை தொடர்ந்து அனைத்து வீடுகளும் அண்மையில் இடிக்கப்பட்டன. இதே இடத்தில் தற்போது ரூ.45.36 செலவில் 10 அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் 240 வீடுகள் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், திருவொற்றியூர் மற்றும் ராயபுரம் பகுதிகளில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகளை அமைக்கும் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

அப்போது அமைச்சர் அன்பரசன் செய்தியாளரிடம் கூறியது

பக்கிங்காம், கூவம், அடையாறு கரையோரங்களில் குடிசைகளில் வசித்து வந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு 1970 ஆம் ஆண்டு வாரியம் அமைக்கப்பட்டது. தற்போது சென்னை யில் 221 திட்டப் பகுதிகளில் மொத்தம் 27,3000 வீடுகள் அமைந்துள்ளன.

இதில் சுமார் 15,000 வீடுகள் மிக மோசமாக பழுதடைந்ததன் காரணமாக சுமார் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் வீடுகளை மறு கட்டமைப்பு செய்யும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்த பணிகள் நிறைவு பெற்று தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

முன்பு சுமார் தலா 236 சதுர அடிகளில் கட்டப்பட்ட வீடுகள் தற்போது 400 சதுர அடிக்கு குறைவில்லாமல் கட்டப்படுகிறது. நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் மூலம் கூடுதல் அடுக்குகள் அமைக்கப்பட்டு இடவசதியும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வாரியம் சார்பில் கட்டப்படும் குடியிருப்பு பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, மின்தூக்கி வசதி உள்ளிட்டவை அமைத்துத் தரப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிற்கான கட்டுமானச் செலவு ரூ. 17 லட்சம் வரை ஆகிறது. இதில் மத்திய அரசு 1.5 லட்சமும், தமிழக அரசு 7.5 லட்சமும் மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இது தவிர அடையாறு,கூவம் ஆற்று ஓரங்களில் வசித்து வருபவர்களின் மறுவாழ்வு திட்ட அடிப்படையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளில் மறுகுடியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே வாரியம் மூலம் ஒதுக்கீடு பெற்ற வீடுகளை மறுவிற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் அன்பரசன்.

இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே பி சங்கர் (திருவொற்றியூர்), எஸ் சுதர்சனம் (மாதவரம்), ஆர்.மூர்த்தி (ராயபுரம்), வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் பி சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் உமா சரவணன், திமுக நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், அருள்தாசன், ஆசைத்தம்பி டி.ராஜு, எம்..எல்.சரவணன், எம்இ. குமார், குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top