மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் ஆலை நிர்வாக நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படும் என ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் ஆலையில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆலையின் நிர்வாக இயக்குநர் அரவிந்த் குமார் தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது அரவிந்த் குமார் பேசியது: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆலையில் செயல்பாடுகளில் முழுமையான வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஊழல் ஒழிப்பை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் வகையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஊழியர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் எச்.சங்கர், ரோஹித் குமார் அகர்வாலா, .பி.கண்ணன், தலைமை விழிப்புணர்வு அதிகாரி ஜே.டி.வெங்கடேஸ்வரலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.