Close
அக்டோபர் 5, 2024 7:04 மணி

திருவொற்றியூர் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

சென்னை

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர்

சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து வீரமணி (46) என்ற மின்வாரிய லைன்மேன் ஆய்வாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

திருவொற்றியூர் விம்கோநகர் அருகே சின்ன எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி( 45). தமிழ்நாடு மின்சார வாரியம், சுனாமி குடியிருப்பு துணை மின் நிலையத்தில் லைன்மேனாக வேலை செய்து வந்தார். திருவொற்றியூர் ஜீவன்லால் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை காரணமாக மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது.

 இதனையடுத்து வந்த புகாரின் பேரில் வீரமணி மற்றும் 5 பேர் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது அருகில் உள்ள மின்மாற்றில் பழுது ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் மின்னிணைப்பை முழுமையாகத் துண்டித்துவிட்டு மின்மாற்றியில் ஏறி பழுது நீக்கும் பணியில் வீரமணியும் சக ஊழியர்களும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சிக்கி வீரமணி மற்றும் முருகேசன் இருவரும் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் வீரமணி ஏற்கெனவே இறந்து போய்விட்டதாகத் தெரிவித்தனர். முருகேசன் தீவிரச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் வீரமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் கூறியது,  மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியின்போது காக மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அருகில் உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் மின்தடை ஏற்பட்டதையடுத்து ஜெனரட்டரை குடியிருப்பின் காவலாளி இயக்கியதுதான் விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து  மின்வாரிய தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே இந்த உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீரமணியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதானம் செய்ததை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top