Close
நவம்பர் 21, 2024 6:57 மணி

தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: ஔவை அருள்

சென்னை

திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் சனிக்கிழமை சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற 39 ஆம் ஆண்டு பாரதி, நேரு தேசிய கலைவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர் ந. ஔவை அருள்

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் தமிழ் திறனறி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந.ஔவை அருள் தெரிவித்தார்.

திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் 39 -ஆம் ஆண்டு பாரதி, நேரு தேசிய கலை விழா சனிக்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ஜி. வரதராஜன் தலைமை வகித்தார்.  பாரதி பாசறையின் செயலாளர் முனைவர் மா.கி. ரமணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர் ந. ஔவை அருள்  இசை ,ஓவியம், பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது ஔவை அருள் பேசியதாவது:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருக்குறள் முற்றோதல் திட்டத்தில் தற்போது உச்சவரம்பு நீக்கப்பட்டு 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ. 15 ஆயிரம் வழங்கப்ப டுகிறது.

காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் குறித்து பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டு இதிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை என்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு சுமார் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு மதுரை தமிழ் சங்கத்தில் பல்வேறு அறிஞர்கள் மூலம் கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தமிழ் திறனறி தேர்வு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் இரண்டரை லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சுமார் 22 மாதங்களுக்கு தலா ரூ.1500 சன்மானமாக வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டு இத்தேர்வில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் இது போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது திறன்களை வளர்த்துக்  கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் ஔவை அருள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் இ.கி.லெனின் தமிழ்க்கோவன், சிவாலயம் ஜெ.மோகன், தொழிற்சங்க தலைவர் நா. துரைராஜ், பாசறை நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கு.நீலகண்டன், டாக்டர் மகாலிங்கம்,செ. பக்கிரிசாமி, மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top