வேங்கை வயல், நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இது குறித்து வாய் திறக்காததைக் கண்டித்தும் புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி நடை பயணம் புறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரம், நாங்குநேரியில் நடைபெற்ற வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை குறிப்பாக வேங்கைய விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.தமிழக அரசு வாய்மூடி மௌனம் காக்கிறது.
தமிழக அரசின் மௌனத்திற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் வாய் திறக்காமல் உள்ளது இதனை கண்டித்து புதுக்கோட்டையில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக தமிழக மக்கள் புரட்சிக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் செல்வதற்கு அனுமதி அளிக்காத காவல்துறையி னரைக் கண்டித்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.