Close
ஜூன் 23, 2024 7:52 மணி

தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை.. 3036 வழக்குகளில் ரூ 6.68 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை (9.12.2023) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் 3036 வழக்குகளில் ரூ.6.68 கோடிக்கு  தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை நகரத்தில்  9 அமர்வுகளும் பிறபகுதிகளில்  6  அமர்வுகளும் விசாரணைக்காக அமைக்கப்பட்டு 4964 எண்ணிக்கையிலான வழக்குகள் பட்டியலிடப்பட்டது. இதில் 3036 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ. 6,68,93,781/- வரையிலான தொகைக்கு தீர்வளிக்கப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில
சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவின் படியும், புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூரணஜெய ஆனந்த்,  புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 4 -ஆவது தேசிய மக்கள் நீதிமன்ற (லோக் அதலாத்) விசாரணை அமர்வுகளை 09.12.2023 புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்  தொடக்கி  வைத்தார்.

பின்னர்  அவர் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஅனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ளது. அனைத்து வழக்குகளையும் உரிய நடைமுறைகளை பின்பற்றி விசாரித்து தீர்வு காணும் பட்சத்தில் அதிக காலவிரயமும், பொருள் விரயமும், அசவுகரியங்களும், மன உளைச்சலும் வழக்காடிகளுக்கு நேரலாம்.

ஆனால், மாற்றுமுறை தீர்வு என்ற அடிப்படையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வழக்கின் தரப்பினர்கள் தங்களது பிரச்னைகளை சமரசமாக பேசி தீர்வுகாணும் போது அந்த வழக்கு நிரந்தரமாக இறுதி நிலையை அடைகிறது.

மேல்முறையீடு கிடையாது, நீதிமன்ற கட்டணம் செலுத்திய நபருக்கே திருப்பி கொடுக்கப்படுகிறது. இருதரப்பினர் களுக்கும் ஏற்ற விதமாக விரைவான நீதியும் கிடைக்கிறது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்பெற்று நிலுவையில் உள்ள வழக்குகளும், விபத்துக்கான இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப பிரச்னைகள் சார்ந்த வழக்குகள் உள்ளிட்ட அனைத்து உரிமையியல் வழக்குகளும் மற்றும் சமரசமாக தீர்வு காணதக்க குற்ற வழக்குகளும் இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங் களிலும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்வு காண பட்டியலிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களும், காவல்துறையினரும், வங்கி, காப்பீடு உள்ளிட்ட அனைத்து துறையினரும் மக்கள் நீதிமன்ற தீர்விற்கு தங்களது மேலான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை பங்களிப் பினை நல்கி வருகிறார்கள். வழக்காடிகள் தரப்பினர்களும் இனிவரும் காலங்களிலும் மக்கள் நீதிமன்றத்தின் செயல் பாடுகளை பயன்படுத்தி பலனடைய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த  லெட்சுமி வகையறாவுக்கும், நியூ இந்தியா ஆயுள் காப்பீட்டு கழக நிறுவனத்தாருக்குமிடையே சமரசம் பேசி தீர்வு காணப்பட்டது.

தீர்வு தொகை ரூ.53,00,000/- க்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே. பூரண ஜெய ஆனந்த்  பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் குடும்ப நல மாவட்ட நீதிபதி எஸ். ஜெயந்தி, அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு நீதிமன்ற சிறப்பு மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே. பாபுலால், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி என். முத்துகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) எஸ். சசிகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பூர்ணிமா, குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண். 1) எம். ஜெயந்தி.

வழக்கறிஞர் சங்க தலைவர்  வி.டி  சின்னராசு, புதுக்கோட்டை மாவட்ட குற்றவழக்கு எதிர்வாத சட்ட உதவி அமைப்பின் தலைமை வழக்கறிஞர் பி.எம். ஷேக்திவான், துணை தலைமை வழக்கறிஞர் கே. மதியழகன், உதவி வழக்கறிஞர்கள் வி. மணிகண்டன் மற்றும் ஆர். யசோதா மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை நகரில்   9 அமர்வுகளும் பிற பகுதிகளில்  6 அமர்வுகளும், மாவட்டம் விசாரணைக்காக அமைக்கப்பட்டு 4964  எண்ணிக்கையிலான வழக்குகள் பட்டியலிடப்பட்டது. இதில் 3036 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ. 6,68,93,781/- வரையிலான தொகைக்கு தீர்வம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நியூ இந்தியா காப்பீட்டு கழகம் சார்பில் மொத்தம் ரூ. 2,29,74,000/- தொகைக்கு தீர்வாணை  பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வை, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும் / மூத்த சிவில் நீதிபதியுமான இ.ராஜேந்திர கண்ணன் ஒருங்கிணைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top