புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு நிவாரணப் பொருட் களை ஆட்சியர் மெர்சி ரம்யா அனுப்பி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்களுக்காக முதல்கட்ட நிவாரணப் பொருட்களை, மாவட்ட ஆட்சியர்.ஐ.சா.மெர்சி ரம்யா இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முன்எப்போதும் இல்லாத வகையில் பெய்த அதி கனமழையின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளான உணவு, பாதுகாப்பான குடிநீர், உடைகள் உள்;ளிட்டவைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற் கிணங்க, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 407 அரிசி மூட்டைகளும், 100 ரவா – சேமியா பாக்கெட்டுகளும், 3 சமையல் எண்ணெய் பெட்டிகளும், 41 கிலோ கிராம அளவில் மலிகைப் பொருட்களும், 480 பிரெட் பாக்கெட்டுகளும், 70 பிஸ்கட் பாக்கெட்டுகளும்,
3,572 எண்ணிக்கையிலான குடிநீர் பாட்டில்களும், 310 போர்வைகளும், 505 பாய்களும், 10 தலையணைகளும், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான உடைகள் என மொத்தம் ரூ.6,86,370 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், நிவாரண பொருட்கள் வழங்க விரும்பும் தன்னார் வலர்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தை அணுகி நிவாரண பொருட்களை வழங்கலாம். மேலும் தகவலுக்கு 93840 56201, 04322-222207, 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-ண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், தனிவட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.