தமிழ்நாடு முதலமைச்சர் ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, புதுக்கோட் டையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (18.12.2023) கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி நகரத்தார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்.
அதன்படி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் இன்றையதினம் கோயம்புத்தூரில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
‘மக்களுடன் முதல்வர்“ என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,
கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 13 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள்.
முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப் பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் புதுக்கோட்டை நகராட்சி, அறந்தாங்கி நகராட்சி, ஆலங்குடி பேரூராட்சி, பொன்னமராவதி பேரூராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 554 மனுக்களும், இதர 289 மனுக்களும் என மொத்தம் 843 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பின்னர், புதுக்கோட்டை நகராட்சி, சமத்துவபுரம் சமுதாயக் கூடத்தில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி.
தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.