அரிமா சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் சென்னை திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்
திருவொற்றியூர் அரிமா சங்கங்கள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாரத்தான் ஓட்டம் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் முன்னதாக தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம் தொடங்கியது. 10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோமீட்டர் என 3 பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடை பெற்றது.
சுங்கச்சாவடி முதல் காசி விசுவநாதர் கோயில் குப்பம் வரை சென்று பிறகு சுங்கச்சாவடியில் நிறைவுற்ற இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 5000 மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் முதல் மூன்று இடங்களை ஆயுதப் படையை சேர்ந்த பெண் போலீசார் பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தேவையான விதிகளை அரிமா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை ஒட்டி எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப் பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் வி.கஜேந்திர பாபு, ஏ.டி.ரவிச்சந்திரன், ஆர்.மணி சேகர், என்.துரைராஜ், எஸ்.டி. சங்கர், ஏ.ஞானசேகர், வழக்குரைஞர் சி முருகன். எஸ். செல்வம் தியாகராஜன், ஆர்.பரசுராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.