Close
நவம்பர் 21, 2024 6:17 மணி

எண்ணூர் தனியார் உரத்தொழிற் சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்: மக்கள் போராட்டம்

சென்னை

எண்ணூர் தனியார் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தல்

எண்ணூர் தனியார் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியறுத்தி  கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட தனியார் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இரண்டாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எண்ணூரில் கோரமண்டல் இன்டர்நேஷனல் என்ற தனியார் உரத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனை எடுத்து இப்பகுதியில் வசித்து வந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

மூச்சுத் திணறல், இருமல், தலைவலி உள்ளிட்ட உபாதைக ளால் பாதிக்கப்பட்ட 42 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனையடுத்து ஆலையை ஆய்வு செய்த தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தற்காலிகமாக ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டனர்.
தற்போது ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி பெரியகுப்பம் சின்னக்குப்பம், தாளங்குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள தனியார் ஒரு தொழிற்சாலையை முற்றுகையிட்டு புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் வியாழக்கிழமை இரவு வரை  நீடித்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு மற்றும் தனியார் உரத் தொழிற்சாலை தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இருப்பினும் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறுதிபடத் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top