சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 206 கோடியில் இரண்டாவது பொது சரக்கு முனையம், ரூ. 135 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மூலதன அகழாய்வு என சுமார் ரூ. 341 கோடி செலவிலான திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திருச்சியிலிருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இது குறித்து காமராஜர் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காமராஜர் துறைமுகத்தில் ரூ. 341 கோடி செலவிலான திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் தொடங்கி வைத்துள்ளார். இதில் ரூ. 206 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ள இரண்டாவது பொதுச் சரக்கு முனையமும், ரூ.135 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மூலதன அகழாய்வு பணிகளும் அடங்கும்.
புதிய முனையத்தில் வாகன ஏற்றுமதி, இறக்குமதியின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. 330 மீட்டர் நீளமும், 33 மீட்டர் அகலமும் கொண்ட கப்பல் தளத்துடன் இப்புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் டொயோடா, டைம்ளெர், இசுஜூ. மாருதி, கொமட்சு போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்களின் வாகனங்கள் இங்கு கையாளப்பட உள்ளன. ஆண்டுக்கு சுமார் 100 கப்பல்கள் வரையிலும், சுமார் ஒன்றரை லட்சம் கார்கள் வரையிலும் கையாளும் திறன் கொண்டதாக இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்முனையம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 3 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கூடுதலாகக் கையாள முடியும். மேலும் துறைமுகத்தின் ஒட்டு மொத்தக் கையாளும் திறன் ஆண்டுக்கு சுமார் 58 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும்.
வாகன உற்பத்தி தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு இப்புதிய முனையம் உறுதுணையாக இருக்கும். ரூ.135 கோடியில் துறைமுகத்தின் உள்பகுதி மற்றும் கப்பல்கள் வந்து செல்லும் வழியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அதிக எடை சரக்குகளைச் சுமந்து வரும் கப்பல்கள் தடை யின்றி துறைமுகத்திற்கு வந்து செல்லும். இதன் மூலம் துறை முகத்தின் ஒட்டுமொத்த திறன் அதிகரிக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.