Close
அக்டோபர் 5, 2024 6:37 மணி

திருவொற்றியூரில் ரயில் மீது கல்வீச்சு: ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைப்பு

சென்னை

சென்னை திருவொற்றியூரில் ரயில் பெட்டி மீது கல்வீச்சு

சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் காலியாகச் சென்ற பயணிகள் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பீகார் மாநிலம் சாப்ரா வரை செல்லக்கூடிய 20 பெட்டிகளை கொண்ட கங்கா காவேரி விரைவு ரயில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 2:15 மணிய ளவில் எண்ணூர் யார்டிலிருந்து  சென்ட்ரலில் பயணிகளை ஏற்றி செல்வதற்காக விம்கோநகர் மார்க்கமாக  வந்து கொண்டிருந்தது.

 திருவெற்றியூர் ரயில் நிலையம் அருகே வரும்போது ரயில் பாதை யோரம் இருந்த மர்ம நபர்கள் இந்த ரயில் மீது சரமாரியாக கல்லை வீசி தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இதில் ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் சமையலறை பெட்டி உள்ளிட்ட 7 ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

 பெட்டிகளில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்ததால் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை.  பின்னர் ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகளை சோதனையிட்டனர். சிறிது நேரத்திற்கு பின் ரயில் புறப்பட்டு சென்றது.

இது குறித்து தண்டையார்பேட்டை மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரயில் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top