Close
ஜூலை 4, 2024 4:39 மணி

புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகி 50 -ஆவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது இன்று…!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் உதயமான (ஜன.14) நினைவுத்தூண்

புதுகை மாவட்டம் உதயமாகி 50 -ஆவதுஆண்டில்அடியெடுத்து வைக்கும்(14.1.1074) நிலையில், கடந்த ஆண்டுகளில் பெரிய அளவில் எந்த வளர்ச்சியும் எட்டப்படவில்லை. புதுக்கோட்டை எம்பி தொகுதி பறி போனதால் மாவட்ட மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

(14 ஜனவரி 1974) தமிழகத்தின் 15 ஆவது மாவட்டமாக  புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட நாள் இன்று. திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை (புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.

புதுகை மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சி மாவட்டமும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன.

தற்போதைய புதுக்கோட்டை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. நூறாண்டுகளுக்கு முன் இந்த மாவட்டம் சோழ, பல்லவ, ஹொய்சாள மன்னர்களால் ஆளப்பட்டது.

14 -ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் இருந்த போது விஜய நகர மன்னர்கள் முஸ்லிம் மன்னர்களுடன் பல போர்களை புரிந்துள்ளனர்.16 முதல் 17 -ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் நாயக்கர்கள் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1948 -ஆம் ஆண்டு வரை தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டையை ஆண்டு வந்தனர். இந்த மாவட்டம் திருச்சியின் ஒரு பகுதியாகவே செயல்பட்டு வந்தது.

1974-ஆம் ஆண்டு ஜனவரி 14 -ஆம் தேதி புதுக்கோட்டை திருச்சி, தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து 1974 -ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தமிழகத்தின் 15 -ஆ வது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4 ஆயிரத்து 661 சதுர கிலோ மீட்டர். தற்போது 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16 லட்சம் பேர் உள்ளனர்.

மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட் டை,  அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி என்று 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. புதுக்கோட்டை, அறந்தாங்கி என்று 2 நகராட்சிகளும், புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் என்று 3 வருவாய் கோட்டமும், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், கீரமங்கலம், பொன்னமராவதி என்று 8 பேரூராட்சிகளும்,

மணமேல்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை, இலுப்பூர், குளத்தூர், கறம்பக்குடி, விராலிமலை, பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டை ஆகிய தாலுகாக்களும் உள்ளன.

அன்னவாசல், அரிமளம், கந்தர்வகோட்டை, குன்றாண்டார் கோவில், பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருமயம், விராலிமலை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல் குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் என்று 13 ஊராட்சி ஒன்றிய ங்கள் உள்ளன. மேலும் 42 பிர்க்காக்கள், 763 கிராமங்கள், 497 ஊராட்சிகள் என்று பெரிய மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.

புதுக்கோட்டை
முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்த நினைவுத்தூண் கல்வெட்டு

இங்கு உலகப் புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு அமைந்துள்ள குடுமியான்மலை, ஓவியத்திற்கு பெயர்பெற்ற சித்தன்ன வாசல், மாணிக்க வாசகரால் கட்டப்பட்டஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயில், திருமயம் கோட்டை என்று ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன.

புதுகை மாவட்டம் வானம் பார்த்த பூமி என்பதால் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலேயே மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய் கள், குளங்கள் வெட்டப்பட்டன. இதில் கிடைக்கும் நீரைக் கொண்டு விவசாயிகள் விவசாயத்துக்கும், பொதுமக்கள் குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தனர்.

மாவட்டத்தில் வெள்ளாறு, அக்னியாறு, பாம்பாறு, அம்புலி ஆறு ஆகியவை ஓடுகின்றன. ஆனால் மழைக்காலங்களில் மட்டுமே ஒன்றிரண்டு மாதங்கள் இந்த ஆறுகளில் தண்ணீர் ஓடும். அதேநேரத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களில் கல்லணை காவிரி கால்வாய் களும் ஓடுகின்றன. இவற்றிலும் போதிய அளவு தண்ணீர் வராததால் விவசாய பரப்பளவும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. மாவட்டம் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகியும் பழமை மாறாமல் அப்படியே உள்ளது. இன்னும் எந்த வளர்ச்சியும் பெறவில்லை என்று மாவட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை  அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் தீவிர முயற்சியின் காரணமாக அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிக்கு முழு நிதியினை யும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்ததால் புதுக்கோட்டைக்கு அரசு மருத்துவக்கல்லூரி கிடைத்தது.

முன்னாள் எம்எல்ஏ வைரமுத்துவின் தீவிர முயற்சியின் காரணமாக கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருமயம் தொகுதியில்  தண்ணீர் பற்றாக்குறையை ஒரளவு குறைத்து கொண்டிருக்கின்றது.

ஆனால் மாவட்டத்தில் கடல் குடிநீர் ஆக்கும் திட்டம் அறிவிப்புடன் நின்று போனது.  ஏறத்தாழ 50 ஆண்டுகளாக மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வரும் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி மிகவும் மெதுமாக நடந்து வருகிறது. அதேபோல் ராமநாதபுரம், கரூர் தொகுதி எம்.பிக்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் வருவது கானல் நீராகவே இருந்து கொண்டிருக்கிறது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் பெருகியதை தடுத்து நிறுத்தா தது,  ஷேர் ஆட்டோ அல்லது சென்னையை போல் மினி பஸ் இயக்குதல் போன்றவற்றை நீண்டகாலமாக மாவட்ட மக்கள் கோரிக்கையாக இருந்தாலும் அதனை எதிர்பார்த்து ஏமாற்றம டைந்தது மட்டும்தான் மாவட்ட மக்கள் கண்ட பலனாகும்.  மாவட்டம் உருவானதை நினைவூட்டும்  வகையில் உருவான நினைவு தூண்  தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது.

புதுக்கோட்டை
மாவட்ட நினைவுத்தூண்

ராஜு, காமராஜபுரம்(65): எனக்கு நினைவு தெரிந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே புதுக்கோட்டை நகரம்தான் இப்பவும் உள்ளது. நான்கு திசைகளிலும் உள்ள 16 வீதிகள் எந்த வளர்ச்சியும் அடையவில்லை.

கட்டடங்கள்தான் பெருகியுள்ளன. நூற்றாண்டு கண்ட நகராட்சி என்று சொல்கின்றனர். ஆனால் நகராட்சிக்குரிய எந்த வசதியும் இங்கு இல்லை. தெரு விளக்கு, நடை பாதை, சாலை வசதிகள் மோசமாக உள்ளன. புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.

ஜீவானந்தம், மச்சுவாடி (45): 25 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே மாதிரிதான் எங்கள் பகுதி உள்ளது. ஆனால் மக்கள் தொகை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. வீடுகள் பெருகி வருகின்றன.

இதற்கேற்ப அடிப்படை வசதிகள் மட்டும் எதுவும் நிறைவேற் றப்படவில்லை. தெருவிளக்கும் பல இடங்களில் எரிவதே இல்லை. இதனால் கிராமப்புறங்களில் வசிப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது.

சி.அடைக்கலம், ராஜகோபாலபுரம்: எங்கள் பகுதியில் ரயில் நிலையம் ஒன்றுதான் கொஞ்சம் நவீனமாகியுள்ளது. கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேடைகள் சேதமடைந்துள்ளன.

குழாய்களில் தண்ணீர் வருவதே இல்லை. ரயிலில் வரும் பயணிகள் பஸ் நிலையத்திற்கோ, நகரின் பிற பகுதிக ளுக்கோ செல்ல வேண்டுமானால் ஆட்டோவில்தான் பயணம் செய்ய முடியும். பஸ் வசதி கிடையாது. ரயில் வரும் நேரங்களில் பஸ்இயக்க பல முறை கோரிக்கை விடுத்தும் எதிர்பார்த்த பயனில்லை.

சரவணன், திருக்கோகர்ணம்: நகராட்சிக்குரிய எந்த வசதியும் புதுகையில் இல்லை. பேரூராட்சி, ஊராட்சிகளில் கூட முக்கிய சாலைகளில் சோடியம் விளக்குகள் அமைத்துள் ளனர் ஆனால் புதுகை நகரில் பல சாலைகளில் இரவு நேரங்களில் தெரு விளக்குகளில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் வெளிச்சம் கிடைக்கவில்லை. உயர்மின் கோபுர விளக்குகள் நிறுவப்பட்டும் அதனை சரிவர பராமரிப்பின்றி போய் கொண்டிருப்பதால் பாதி நாட்கள் விளக்குகள் எரிவது கிடையாது.

குமரப்பன், விவசாயி: மாவட்டத்தில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் விவசாயத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் முந்திரி அதிக அளவில் விளைகிறது. முந்திரி தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாக ஏராளமானோரும் பயனடைவர். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம்.

செந்தாமரை, பாலன் நகர்: பஸ் நிலைத்தில் இருந்த எங்கள் பகுதிக்கு வர ஆட்டோவில் 150 முதல் 200 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். மற்ற நகராட்சிகளில் ஷேர் ஆட்டோ இயக்கப்படுகிறது. ஆனால் நூற்றாண்டு கண்ட நகராட்சியில் ஷேர் ஆட்டோ, உள்வட்ட சுற்று பேருந்து வசதிகள் செய்யப் படவில்லை.

நகரின் முக்கிய இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும். அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்லும் வகையில் பஸ் வசதி செய்ய வேண்டும். கருவேப்பிலான், திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

கல்வியாளர் ரவிச்சந்திரன்: மாவட்ட  உதயமான நாளில் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள், கலாசார போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்.

பறிபோன புதுக்கோட்டைஎம்பி தொகுதி…

தொகுதி சீரமைப்பினால் , புதுகை எம்பி தொகுதியும் பறிபோனது. இதனால் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளும் அருகில் உள்ள திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளுடன் இணைக்கப் பட்டன.

அறந்தாங்கி தொகுதி மக்கள் கோரிக்கைகளுக்காக தங்கள் எம்பியை சந்திக்க சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரயில்வே திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாதது. பெல் தொழிற்சாலை தவிர குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் எதுவும் வராதது உள்பட  மாவட்ட வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top