புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்துக்கான புதிய கட்டடத்தின் கட்டுமானப்பணி களை முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகம் அரசு பள்ளிகள், தாலுகா அலுவலகம் வளாகப் பகுதி அருகே அமைந்துள்ளது. இது 1988 -ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. தினந்தோறும் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், பள்ளி மாணவர்கள் இந்நூலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதனிடைய 35 ஆண்டுகள் கடந்துவிட்ட காரணத்தால் நூலக கட்டிடம் மிகவும் மோசமாக சேதமடைந்து இடிந்து விடும் நிலைக்குச்சென்றது.இதுகுறித்து தகவலறிந்த மாநிலங்கள வை உறுப்பினர் ப.சிதம்பரம் சம்பந்தப்பட்ட நூலகத்தை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி நினைவாக நினைவு நூலகத்துக்கு புதிய கட்டடடம் கட்டுவ தற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து, கடந்த 8.9.2023 -அன்று பழைய இடத்தில் புதிய நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில், திருமயத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார்.
இதில், முன்னாள் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம.சுப்புராம், ஒன்றியக்குழு உறுப்பினர் கணேஷ்பிரபு, நிர்வாகிகள் அக்பர்அலி, அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.