கடந்த 9 மாதங்களில் ரூ. 154 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை: துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல்
நடப்பு நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில் சென்னை துறைமுகம் ரூ.154 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என துறைமுக தலைவர் சுனில் பாலிவால் வெள்ளிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
75 -ஆவது குடியரசு தின விழா சென்னை தண்டையார்பேட்டை யில் உள்ள சென்னை துறைமுகத்தின் ஸ்ரீ பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் துறைமுகத் தலைவர் தலைவர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
பின்னர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட சுனில் பாலிவால் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக ஊழியர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், தொழில் பாதுகாப்பு படையினர், போட்டியலில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பேசியது, 142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் இம்மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இத்துறைமுகம் இருந்து வருகிறது.
துறைமுகத்தினை சீரான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல துறைமுகம் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக நடப்பு நிதி ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 154 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இது இதற்கு முந்தைய ஆண்டு காலத்தை ஒப்பிடும்போது ரூ. 94 கோடி அதிகம் ஆகும். இதுபோன்று ஈட்டப்படும் லாபத் தொகையை கொண்டு துறைமுகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துறை முகம் தற்போது செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவாக முடித்திட அனைத்து அதிகாரிகளும் உறுதுணை யாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.
மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்:
சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் . இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்து ஒப்பந்ததாரருடன் சில தினங்களுக்கு முன்பு விரிவான பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
துறைமுகத்திற்கு வெளியே கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை துறைமுகத்தின் உள்ளே ரூ. 52 கோடி செலவில் கண்டெய்னர் லாரிகள் நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ள இம்மையத்தில் சுமார் 550 லாரிகள் நிறுத்தி வைக்கலாம்.
காமராஜர் துறைமுகத்தில் ரூ. 341 கோடி செலவில் அமைக்கப்பட்ட பல் சரக்குகளைக் கையாலும் புதிய கப்பல் தளத்தை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கான நிதியை வங்கிகள் உள்ளிட்ட எந்த நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெறாமல் காமராஜர் துறைமுகமே முழுவதுமாக செலவிட்டுள்ளது.
மாலத்தீவுக்கு உல்லாசப் பயணிகள் கப்பல்:
உல்லாச பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டம் வெற்றிகரமாக கடந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்டயொட்டி நடப்பாண்டிலும் சர்வதேச உல்லாச பயணிகள் கப்பல் போக்குவரத்தை லிட்டரல் குரூஸ் என்ற நிறுவனம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கப்பல் சென்னை, தூத்துக்குடி, திரிகோணமலை கொழும்பு, மாலத்தீவு வழியாக சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ. 3.12 கோடியில் 7 சமூக மேம்பாட்டு திட்டங்கள்:
பெரு நிறுவன சமூக பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் சுமார் 3.12 கோடியில் 7 சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளன தண்டையார்பேட்டையில் உள்ள விளையாட்டு மைதானம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அத்லெட்டிக், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்குள்ள சென்னை துறைமுக பள்ளியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்கள், சீருடைகள், புத்தகங்கள், காலணிகள் உள்ளிட்டவைகள் இப்பள்ளி மாணவர்களுக்கு துறைமுகம் சார்பில் வழங்கப்படுகிறது.
மேலும் முன்பிருந்த கல்வி கட்டணம் மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கப் பட்டுள்ளது இவ்வாறான சலுகைகள் மூலம் கடந்த கல்வியாண்டில் மொத்த மாணவர்களின் எண்ணிக் கை 480 என்ற நிலையிலிருந்து தற்போது மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருந்து வரும் ஆசிரியர்களுக்கு சென்னை துறைமுகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு முன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும். துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சென்னை துறைமுகத்தில் பணியாற்றுவதில் பெருமை அடைய வேண்டும் சென்னை துறைமுகத்தின் இலட்சினையை எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும் என்றார் சுனில் பலிவால்.
இந்நிகழ்ச்சியில் துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், தலைமை கண்காணிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணன், துறை தலைவர்கள் கிருபானந்தசாமி, இந்திரனில் ஹசிரா, ராமச்சந்திர மூர்த்தி, ஜெயசிம்மா, டாக்டர் பத்மா, மில்டன் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.