Close
ஜூலை 2, 2024 2:04 மணி

உறவினர் வீட்டு தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு, சிறுநீரை கலந்தவர் கைது

சென்னை

முன்விரோதம் காரணமாக தண்ணீர் தொட்டியில் மலம் சிறுநீர் கலந்தவர் கைது

சென்னை திருவொற்றியூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக உறவினர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு மற்றும் சிறுநீரை கலந்து வந்த எல்லப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
 திருவொற்றியூர் கல்யாண செட்டி நகரை சேர்ந்தவர் மோகன், இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது. இவரது வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவர் எல்லப்பன் மோகனும் எல்லப்பனும் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். இந்நிலையில் மோகனின் மனைவி சங்கீதா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.
இதில் தங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் எல்லப்பன் தொடர்ந்து மலம் மற்றும் சிறுநீரை கலந்து வந்துள்ளதாகவும்,  இதனால் தங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டு தொடர்ந்து அவதிக்கு உள்ளானதாகவும், எனவே இதில் தொடர்புடைய எல்லப்பன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து எல்லப்பனை அழைத்து போலீசார் விசாரித்த போது சங்கீதா தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். தானும் மோகனும் பங்காளி உறவினர் எனவும் தங்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் இச்செயல்களை செய்ததாக எல்லப்பன் தெரிவித்தாராம்.
இதை அடுத்து அவரை கைது செய்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் நோய் பரப்புவதற்கு காரணமாக இருந்ததாக எல்லப்பன் மீது வழக்கு பதிவு செய்து வியாழக்கிழமை இரவு திருவொற்றியூர் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது விசாரணையின் போது எல்லப்பனுக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருந்ததாகவும், மேலும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாகவும் கூறியதையடுத்து அவரை காவல் நிலைய பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டதாக தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top