புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மலையக்கோயில் தைப்பூச திருவிழாவை யொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 29 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 5 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குலமங்கலம் மலையகோயில் காளீஸ்வரர், சுப்பிரமணிய சுவாமி தை பூச திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிகட்டு நிகழ்ச்சி நடத்த ஊரார்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக கோயில் அருகே உள்ள ஜல்லிகட்டு திடல் கடந்த ஒரு வாரமாக திருமயம் வட்டாட்சியர் எஸ்.புவியரசன் தலைமையில் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வந்தது.
இதையடுத்து சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஜல்லிகட்டு போட்டியை சட்ட துறை அமைச்சர் எஸ். ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், பனையப்பட்டி, விராச்சிலை, அறந்தாங்கி, சிவகங்கை, சிங்கம்புணரி, மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்த கொண்டன.
சீறி வரும் காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து களத்தில் இறங்கினர். போட்டியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் உள்ளூர் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த காளைகள் ஒவ்வவொன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. சீறிவந்த காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசாக ரொக்கப்பரிசு, சைக்கிள், சில்வர், பித்தளை அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள், காளையின் உரிமையாளர், பார்வையாளர் உள்பட 29 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் (35), அடைக்கன் (23), அண்ணாமலை (54), மாரிமுத்து (45), சக்தி (26) உள்ளிட் டோர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் ஊர்தி மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்தனர். பாதுகாப்பு பணியில் பொன்னமராவதி கோட்ட துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையில் மாவட்ட மற்றும் பனையபட்டி போலீஸார் உள்பட 250 பேர் ஈடுபட்டனர்.