Close
அக்டோபர் 5, 2024 7:31 மணி

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை

திருமயம் அருகே மூன்று கிராமங்கள் இணைந்து நடத்திய மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து செல்லும் மாட்டு வண்டிகள்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே 3 கிராமங்கள் இணைந்து நடத்திய ஞாயிற்றுக்கிழமை நடத்திய இரு பிரிவு மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பரளி, மாவூர், மலைக்குடிப்பட்டி ஆகிய கிராமங்கள் இணைத்து நடத்திய 12 -ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் நடைபெற்றது.

பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளில் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சென்று வரும் பந்தய தொலைவு 8 மைல் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த பந்தயத்தில் முதலிடம் வந்த பூவாண்டிபட்டி நாச்சியார் முதல் பரிசையும், 2 -ஆம் பரிசை பாகனேரி புகழேந்தி, 3 ஆம் பரிசை கோட்டையூர் சிதம்பரம், 4 -ஆம் பரிசை பட்டணம் காத்தாயி அம்மன் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன.
இதையடுத்து நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. சென்று வரும் பந்தய தொலைவு 5 மைல் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசை பாகனேரி புகழேந்தி, 2 -ஆம் பரிசை திருப்பத்தூர் பவுன்ராஜ், 3-ஆம் பரிசை ஆறாவயல் செல்வராஜ், 4 -ஆம் பரிசைகொள்ளக்காட்டுப்பட்டி கற்பக விநாயகர் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன.

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பெரிய மாட்டு பிரிவில்முறையே ரூ.20,001, ரூ.17,001, ரூ. 15,001, ரூ.6001 ஆகிய ரொக்க பரிசும், சிறிய மாட்டுப்பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.15,001, ரூ.13,001, ரூ.11,001, ரூ.5001 ஆகிய ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

பந்தயம் நடைபெற்ற மலைக்குடிப்பட்டி, திருப்பத்தூர் புறவழிச்சாலையின் இருபுறமும் திரளான ரசிகர்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர். பந்தயத்திற்கான ஏற்பாடுகளை பரளி ,மாவூர் , மலைக்குடிப்பட்டி ஊரார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top