பொதுமக்கள், பேருந்து நடத்துநர்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பத்து ரூபாய் நாணயங்களை எவ்வித பத்து ரூபாய் நாணயங்களின் பயன்பாடுகள் தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (19.02.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து வங்கிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என இந்திய ரிசர்வ் வங்கியால் ஏற்கனவே பலமுறை விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான எண்ணம் இருப்பதால் பத்து ரூபாய் நாணயங்கள் சில இடங்களில் வாங்கப்படுவதில்லை என்ற புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், பேருந்து நடத்துநர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றையதினம் வங்கியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், வங்கியாளர்கள் பொதுமக்கள் அளிக்கும் பத்து ரூபாய் நாணயங்களை எப்போதும் பெற்றுவருவதாகவும், பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என அனைத்து வங்கிகளிலும் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நடத்துநர்கள் பொதுமக்களிடமிருந்து பத்து ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும், இதனை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் கண்காணித்து பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதை உறுதிபடுத்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகள் வியாபாரிகள், பொதுமக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் ஸ்டால்கள் அமைத்து பத்து ரூபாய் நாணயங்களை பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் ஆங்காங்கே உள்ள கடைகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்து பொதுமக்கள் வழங்கும் பத்து ரூபாய் நாணயங்களைப் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், பேருந்து நடத்துநர்கள், வியாபாரிகள் அனைத்துத் தரப்பினரும் பத்து ரூபாய் நாணயங்களை எவ்வித தயக்கமின்றி ஏற்றுகொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (பொ) சிவலிங்கம், முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு உள்ளிட்ட பல்வேறு வங்கி மேலாளர்கள், வட்டாரப் போக்குவரத்து தனியார் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மாவட்டத்தின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.