Close
ஜூலை 2, 2024 2:40 மணி

வாச்சாத்தி நாடுமுழுவதும் செங்கொடி இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் போராட்டம்: விஜூ கிருஷ்ணன் பேச்சு

புதுக்கோட்டை

விழாவில் பேசுகிறார், அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் விஜூகிருஷ்ணன்

வாச்சாத்தி நாடுமுழுவதும் செங்கொடி இயக்கத்திற்கு
உத்வேகம் அளிக்கும் போராட்டம் என்றார் விஜூ கிருஷ்ணன்.

வாச்சாத்தி தொடர்பான போராட்டங்களும், குற்றவாளிக ளுக்குப் பெற்றுத்தந்த தண்டனையும் நாடுமுழுவதும் உள்ள செங்கொடி இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்றார் அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா ளர் முனைவர் விஜூ கிருஷ்ணன்.

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்றமைக் காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகத்திற்கு பாராட்டுவிழா புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில்  விஜூகிருஷ்ணன் கலந்துகெண்டு மேலும் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதை ப.சண்முகம் பெற்றிருப்பது அவரது போராட்டக் களத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். மலைவாழ் மக்களுக்கான போராட்டத்தை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 1 கோடியே 54 லட்சம் உறுப்பினர்களின் சார்பில் விருது பெற்ற தோழர் ப.சண்முகத்தையும், தமிழ்நாடு அரசையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

1992-ஆம் ஆண்டு முதல் வாச்சாத்தி தொடர்பான போராட்டச் செய்திகளையும் களத்தினை ஆங்கிலப் பத்திரிகைகள் வாயிலாக தோழர் சண்முகத்தை அறிந்து வருகிறேன். 1999 முதல் விவசாயிகள் இயக்கத்தில் அவரோடு நான் பணியாற்றி வருகிறேன். மகாபாரத்தில் மிகப்பெரிய குருவாக துரோனாச் சாரியார் வருவார். அவரோ கட்டைவிரலை காணிக்கையாகக் கேட்பார். தோழர் ப.சண்முகம் ஏராளமான தலைவர்களை உருவாக்கிய குருவாக விளங்கி வருகிறார்.

வாச்சாத்தி போன்று நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன. நடந்துகொண்டு இருக்கின்றன. அத்தனை வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. ராஜஸ்தானில் நடைபெற்ற ஒருவழக்கில் மேல்சாதி ஆண்கள் கீழ்சாதி பெண்களைத் தொடமாட்டார்கள் என்று கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது.

ஆனால், தொடர்ச்சியாக 32 ஆண்டுகள் இடைவிடாமல் மக்கள் மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றங்களில் போராட்டம் நடத்தி குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளி கள் என்று தீர்ப்பைப் பெற்றதோடு, தண்டனையையும் பெற்றுத் தந்தது உலகத்திலேயே நடந்திராத ஒன்று.

வாச்சாத்தி சம்பவத்தில் மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்துதான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் வாச்சாத்திப் பெண்களின் பங்கும் முக்கியமானது. இதில் படைத் தளபதியாய் இருந்தவர் சண்முகம். வாச்சாத்தி நாடுமுழுவதும் உள்ள செங்கொடி இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் போராட்டம் ஆகும்.

தோழர் சண்முகம் மாணவப் பருவத்திலிருந்தே மிகச்சிறந்த போராளியாக விளங்கி வருபவர். மூன்று முறை சிறைத் தண்டயை அனுபவித்தவர். நீதிபதி தினகரன் 200 ஏக்கர் அரசு நிலத்தையும், சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 54 ஏக்கர் அரசு நிலத்தையும் அபகரிக்க முயன்ற போது போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். தற்பொழுது நிலம் ஒரு பிரச்னை இல்லை என்கின்றனர். ஆனால், பல நேரங்களில் நிலம்தான் சாதாரண மக்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்துக்கான போராட்டமாக மோடி அரசு சித்தரித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளை அப்போராட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்தும், மகாராஷ்டி ராவில் இருந்து ஏராளாமா விவசாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தை அகில இந்தியப் போராட்டமாக மாற்றிக் காட்டியதில் ப.சண்முகத்தின் பங்கும் முக்கியமானது.

கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பயிர் காப்பீடுக்காக விவசாயிகளிடம் இருந்து 52 ஆயிரம் கோடி வசூலிக்கப் பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் கேரள முதலமைச்சர் டெல்லியில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அம்மாநிலத்துக்கு 13,600 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. போராட்டமே நமக்கான உரிமையை பெற்றுத்தரும். ப.சண்முகத்தின் வாழ்நாள் போராட்டம் நமக்கான உந்துசக்தியை அளிக்கிறது என்றார்.

விழாவிற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். திமுக விவசாய அணி மாநில மாநில செயலாளரும், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, எஸ்.கே.எம் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன்,

அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில செயலாளர் எ.சந்திரமோகன் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் கா.பசுமைவளவன், விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தமிழ்மாநில விவசாயிகள் சங்கப்பொதுச் செயலாளர் அ.பாஸ்கர்,

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன், விவசாயிகள் விடுதலை முன்னணி பொருளாளர் பி.செல்வராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்,

விவசாயிகள் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்திரன், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க மாநில தலைவர் கே.முகமதலி, மழைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு, பொதுச் செயலளார் இரா.சரவணன், விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் வரவேற்க, தலைவர் எஸ்.பொன்னுச்சாமி நன்றி கூறினார். விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத் திற்கும் அதிகமான விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top