கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழாவில்பேசுகிறார், மாவட்டத்தலைவர் ஆர். முத்துக்குமார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கொண்டையன்பட்டி ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வீரமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினர் திருப்பதி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துளிர் திறனறிவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறையின் புதுக்கோட்டை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (தொடக்க கல்வி) கோவிந்தன் சிறப்புரை ஆற்றி மகளிர் தின வரலாறு குறித்து பேசியாதவது:
1975 -இல் ஐக்கிய நாடுகள் சபையால் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இது முதன்முதலில் மார்ச் 19, 1911 அன்று அமெரிக்காவிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.
மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம், பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான அவர்களின் உரிமையை நினைவுகூரும் அதே வேளையில், கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பல்வேறு துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் சிறப்பித்துக் காட்டுகிறது.பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் முத்துக்குமார்,இல்லம் தேடிக் கல்வி மைய புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசன், தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டார துணைத் தலைவர் சின்னராஜா உள்ளிட்டோர் கலந்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
கவிதை, பேச்சு,நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.மகளிர் தின நிகழ்வுகளை தனலெட்சுமி, உஷா, மகாலெட்சுமி, மாதவி, செளம்யா, திவ்யா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். ஊர் பிரமுகர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக அறிவியல் இயக்க உறுப்பினர் மகாலெட்சுமி நன்றி கூறினார்.