திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் கூட்டுச்சாலையில் அனுமதி இன்றி வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் நிறுவியதாக 15 நபர்களை கலசப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே நாயுடு மங்கலம் கூட்டுச்சாலை சந்திப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் சார்பில் அக்னி கலசம் சாலையோரம் நிறுவப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாயுடு மங்களம் கூட்டு சாலை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட உள்ளது என்பதால் அக்னி கலசத்தை அகற்றி பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதன் அருகிலேயே அக்னி கலசம் வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை உறுதி அளித்தது.
அதன் பேரில் அந்த அக்னி கலசம் அகற்றப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அக்னி கலசம் வைக்கப்பட்ட நிலையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அக்னி கலசத்தை அப்புறப்படுத்தினர் . இதனை கண்டித்து வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனுமதியின்றி அக்னி கலசத்தை நாயுடு மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வைத்துள்ளதாகவும் அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் அதிகாலை 4:30 மணிக்கு அந்த அக்னி கலசத்தை பறிமுதல் செய்ததுடன் அக்னி கலசம் நிறுவிய 15 நபர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளதாகவும் செய்திகள் பரவின.
இதனை அடுத்து அப்பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் தலைமையில் பாமகவினர் குவிய தொடங்கினர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாயுடு மங்கலம் சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டன அறிக்கை இந்த நாயுடு மங்கலம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடையூறாக பல சிலைகளும் சின்னங்களும் உள்ளன ,அவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது,
ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அக்னி கலசத்தை மட்டும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மீண்டும் மீண்டும் அகற்றுகிறது என்றால் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்த அக்னி கலசம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது,
அதனை பலவீனமாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கருதினால் அவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்ட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும், எனவே வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து நாயுடு மங்களம் கூட்டு சாலையில் அக்னி கலசத்தை மீண்டும் அமைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.