செய்யாற்றில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக நில அளவையா் மற்றும் கணினி உதவியாளா் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவா் வெங்கடேசன், இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
நெசவுத் தொழில் செய்து வந்த இவா், வயது முதிா்வின் காரணமாக ஊதுபத்தி வாங்கி கிராமங்களுக்குச் சென்று வியாபாரம் செய்து வருகிறாா். இவா், 1999-ஆம் ஆண்டு திருவோத்தூா் பகுதியைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் வீட்டு மனையை வாங்கினாா். அந்த மனைக்கு அருகிலேயே அரசின் இலவச வீட்டுப் மனை பட்டா ஒன்றையும் பெற்றிருந்தாா். அங்கிருந்த கூரை வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வெங்கடேசன் வீட்டு மனைகளை மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க முயன்றாா். அதற்காக செய்யாறு சாா்- பதிவாளா் அலுவலகத்தில் விசாரித்தபோது, மேனகா என்பவரிடம் கிரையம் பெற்ற உரிமை மாற்று ஆவணமாக பெற்று இருந்தது தெரிய வந்தது. மேலும், பட்டா பெயா் மாற்றம் அவா் பெயரில் இருந்தால் மட்டுமே அவரே நேரடியாக கிரையம் செய்ய முடியும் எனத் தெரிவித்துவிட்டனா்.
இந்த நிலையில், திருவத்திபுரம் நகராட்சியில் 20.12. 23 தேதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பட்டா மாற்றம் செய்வதற்காக முதியவா் மனு அளித்து இருந்தாா்.
இந்த மனு குறித்து விசாரித்த போது எவ்வித நடவடிக்கை இல்லை எனத் தெரிய வரவே, திங்கள்கிழமை திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர நில அளவையா் கன்னிவேல் என்பவரை சந்தித்துள்ளாா். அப்போது, பட்டா மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாகத் தெரிகிறது. எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது, மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை எடுத்து சொல்லியும் கண்டிப்பாக ரூபாய் 20000 கொடுத்தால்தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும் என்று சொல்லி சர்வேயர் அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு முதியவா் மறுப்பு தெரிவிக்கவே, கடைசியாக ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயா் மாற்றம் செய்ய முடியும் என்று நில அளவையா் கன்னிவேல் கூறிவிட்டாராம்.
இதனால் வேதனை அடைந்து மனம் உடைந்த முதியவா் வெங்கடேசன் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் செய்தாா்.
அதன் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் நில அளவையா் கன்னிவேலிடம், வெங்கடேசன் கொடுக்க முயன்றாா்.
அப்போது, அங்கிருந்த கணினி உதவியாளா் மாதவனிடம் கொடுக்கச் சொல்லி, வெங்கடேசன் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் வேல்முருகன், உதவி ஆய்வாளா் கோபிநாத் மற்றும் போலீஸாா் நில அளவையா் கன்னிவேல் , கணினி உதவியாளா் மாதவன் ஆகியோரை கைது செய்தனா். மேலும் இச்சம்பவம் திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.