Close
நவம்பர் 21, 2024 6:51 மணி

திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.16 கோடி செலவில் புதிய கட்டடங்கள்

சென்னை

திருவொற்றியூரில் ரூ.16 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிக்கான புதிய கட்டடங்களுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டிய சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர்

திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.16 கோடி செலவில்  புதிய கட்டடங்களுக்கு கே.பி.சங்கர் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்

திருவொற்றியூரில் கடந்த 12 ஆண்டுகளாக தாற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 16 கோடியில் கட்டடங்கள் கட்டுவதற் கான கட்டுமானப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருவொற்றியூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியாக கடந்த 2012-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து புதிட கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடும் செய்தார். இதனையடுத்து தேரடி அருகே பூங்தோட்டத் தெருவில்  மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது, கல்லூரிக்கான நிரந்தர கட்டுவதற்கான நிலத்தினை கையகப்படுத்துவதில் அரசுத் துறைகளிடையே  தொடர்ந்து தடங்கல்கள் இருந்து வந்ததால் கடந்த 10 ஆண்டுகளக்கும் மேலாக நிரந்தரக் கட்டடம் அமைக்கப்படுவதில் காலதாமதம் நிலவி வந்தது. இது குறித்து கல்லூரி மாணவர்களும், பொது நல அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து விம்கோநகர் பகுதியில்  பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் கூட்டுறவுத் துறையின் தக்கைக் கல் தொழிற்சாலைக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் காலி இடம் கல்லூரிக்கான கட்டடங்கள் அமைக்கப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டது. மேலும் திருத்தப்பட்ட மதிப்பீடாக ரூ. 16 கோடியில் அனைத்து கட்டடங்களையும் அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் சுமார் 52 ஆயிரம் சதர அடியில் கட்டப்பட உள்ள கட்டுமானப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

ரூ.16 கோடியில் நிரந்தரக் கட்டடங்கள்: கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.விஜயா 

2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நிரந்தர கட்டடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேல் காலதாமதம் ஆகிவிட்டது. இந்த ஆண்டுவரை 9 பேட்ச் மாணவர்கள் கல்லூரி படிப்பு முடித்துச் சென்றுள்ளனர். தற்போது சுமார் 900 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 21 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இளங்கலை தமிழ், ஆங்கிலமும், இளம் பொது வணிகம், இளம் வணிகப் பயன்பாடுகள் ஆகிய வகுப்புகள் மட்டுமே உள்ளன. புதிய கட்டடத்தில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டவுடன் இளம் அறிவியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். பின்னர் முதுநிலை வகுப்புகளை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்கு கட்டடங்களில்  18 வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், அலுவலகம், ஆசிரியர்களுக்கான அறைகள் அமைய  உள்ளன. பொதுப்பணித் துறையின் மேற்பார்வையில் சுமார் 15 மாதங்களில் கட்டடங்கள் முழுமையாக முடிவடையும்  என்றார் விஜயா.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம் , திமுக நிர்வாகிகள் வி.ராமநாதன், ஆர்.முருகேசன், ஆர்.டி.மதன்குமார்,எஸ்.டி.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top