Close
செப்டம்பர் 18, 2024 3:34 காலை

சொந்த காசில் சூனியம்..! சுவாசிக்கும் காற்றை எங்கு கடன் வாங்கமுடியும்..?

பவளப்பாறைகள்

நாம் சுவாசிப்பதற்கு காரணமாக உள்ள ஆக்சிஜன் எங்கிருந்து உருவாகிறது என்று கேட்டால், பொதுவாக எல்லோருமே காடுகளும் நாம் வளர்க்கும் மரம், செடி கொடிகளும்தான் என்று கூறுவோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா..?

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70சதவீதத்தை தயாரிப்பது பெருங்கடல்கள்தான். 25சதவீதத்தை அமேசான்,போர்னியா போன்ற வெப்பமண்டல காடுகளும், மீதமிருக்கும் 5சதவீதம் நாம் வளர்கின்ற மரங்களும் செடிகளும் கொடுக்கின்றன.

பெருங்கடல்கள் ஆக்சிஜனை தயாரிப்பது எப்படி? கடலில் உள்ள சின்ன சின்ன உயிரினங்களும் தாங்கள் உணவு தயாரிக்கும் முறையில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அதன் மூலம் நமக்கு ஆக்சிஜன் கிடைக்கிறது. நம்முடைய கட்டைவிரலின் மேற்பகுதியில் உள்ள இடத்தின் அளவில் மட்டும் சுமார் 10லட்சம் உயிரினங்கள் இருக்கும் அளவிற்கு மிகச் சிறிய உயிரினங்கள்.

அவை “ப்ரொக்ளோரோகாக்கஸ்” (prochlorococcus) என்று அழைக்கப்படுகின்றன. அந்த சிறிய உயிரினம்தான் நாம் சுவாசிக்கக்கூடிய ஐந்தில் மூன்று பங்கு, நமது மூச்சுக்கான ஆக்சிஜனை தயாரிக்கிறது. அப்படியெனில் கடலின் மகத்துவத்தை புரிந்துகொள்ளவேண்டும்.

அதனால் கடல் ஒன்றும் நம்முடைய குப்பைதொட்டியல்ல, நினைத்த குப்பையெல்லாம் கொண்டு வந்து கொட்டுவதற்கு என்பதை இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எண்ணவேண்டும். காது கிழிய கத்தினாலும் யார் காதிலும் விழாதவர்களாகவே இருக்கிறார்கள்.

இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் கடல்களை நாம் சேதம் செய்து வருகின்றோம். இல்லை கடல்களை கொலை செய்து வருகின்றோம். அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம்.

காலநிலை மாற்றம்

கடல்களின் வெப்பத்தை அதிகரிக்க அதில் உள்ள பவளப்பாறைகள் அழிந்துவருகின்றன. அவைதான் சிறிய உயிர்களின் வாழ்விடம். கடலில் அணுக்கழிவுகளை, அனல் மின் நிலைய கழிவுகளை, ரசாயன தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகளை, நகரக் கழிவுகள், உரம் சார்ந்த விவசாய உரக்கழிவுகள், ரசாயன பூச்சு மற்றும் “பிஒபி”யில் (POP) செய்யப்படும் சாமி சிலைகள்,நெகிழி என நாம் கடல்களில் கொட்டுவது நாம் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது.

இந்த கழிவுகள் அனைத்தும் கடலில் வாழக்கூடிய சிறிய உயிரினங்களை பாதிக்கின்றன. அது நமக்கான ஆக்சிஜன் தயாரிப்பை பாதிக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதும் கடலில் எதை கரைப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

இதற்கும் கோர்ட் வந்து சொன்னால்தான் கேட்பார்களோ..?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top