Close
டிசம்பர் 3, 2024 5:11 மணி

தமிழக எம்பிக்கள் கேரள எம்.பியிடம் பாடம் கற்க வேண்டும்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான எதிர்மறை விடயங்களை வேகப்படுத்தி வருகிறது கேரளா. முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்பதற்காக, பம்பரமாக சுற்றிச் சுழலும் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர், டீன் குரியா கோஷிடம் தமிழகத்தில் உள்ள 39 எம்.பி.,க்களும் பாடம் படிக்கச் செல்லுங்கள்.

வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவை உலகமே கண்டு விக்கித்து அழுது கொண்டிருந்த நிலையிலேயே, ஈவு இரக்கமற்று வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவைப்போல,இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும், முல்லைப் பெரியாறு அணையால் பேரழிவு ஏற்படும் என்று, நன்றி உணர்வு ஏதுமில்லாமல் களத்திற்கு வந்தார்கள் விஷம கருத்து கொண்ட மலையாளிகள்.

உடனடியாக முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற மைய மண்டபத்திலேயும் குரல் எழுப்பி தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இதுவரை இந்த களத்திற்கே வராத எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினரான, ஹிபி ஈடன் களத்திற்கு வந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே அதிக வழக்குகளை கைவசம் வைத்திருக்கும், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான டீன் குரியா கோஸ், ஒரு படி மேலே போய், நேற்று முன்தினம் National Dam Safety Authority சேர்மன் ஸ்ரீ அனில் ஜெயினை சந்தித்து, நீண்ட மனு ஒன்றைக் கொடுத்ததோடு, முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக உடனடியாக புதிய அணைக்கான வேலையை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

இடுக்கி எம்.பி யின் வேகம் பிரமிக்க வைக்கிறது. 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்குப் பிறகு அணை அருகே ஏற்பட்ட காலநிலை பிரச்சனை மற்றும் நிலநடுக்க சாத்தியக்கூறுகளை அவசர அவசரமாக பரிசீலிக்க வேண்டும் என்கிற அவரது கோரிக்கை அபாயகரமான ஒன்று.

கூடுதலாக மத்திய அரசு பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 9 ன் அடிப்படையில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு அணையின் பாதுகாப்பு சம்பந்தமாக அனைத்து விடயங்களையும் நேரடியாக செய்ய முடியும் என்பதையும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும் ஏப்ரல் 8 2022 ஆம் தேதியில் உச்சநீதிமன்றம் கொடுத்த அறிவுறுத்தலின்படி, முல்லைப் பெரியாறு அணையை தற்போது பருவநிலை காலங்களிலும், சாதாரண நாட்களிலும்,மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கும் மேற்பார்வை குழுக்கள், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் வருகிறது என்பதையும் அவர் நினைவு கூர்ந்து இருக்கிறார்.

அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமே நேரடியாக செய்ய முடியும் என்று சேர்மனிடம் வலியுறுத்திய இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர், ஆணையம் அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அது செயல்பாட்டிற்கு வராதது வருத்தமளிப்பதாகவும் தன் கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த ஆணையத்தின் சேர்மன் ஸ்ரீ அனில் ஜெயின், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணை விடயத்தில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக தலையிடும் என்றும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

இந்தியாவில் பெரிய அணைகள் என்று மத்திய ஜல் சக்தி துறையால் பட்டியலிடப்பட்டிருக்கும் 5,745 அணைகளில், நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வயது கொண்ட அணைகளாக இந்தியாவில் இருப்பது 220 அணைகள். அந்த 220 அணைகளில் வராத பிரச்சனை, முல்லைப் பெரியாறுக்கு மட்டும் ஏன் வந்தது என்கிற கேள்வியை உங்கள் முன்வைக்கிறேன்.

துரதிஷ்டவசமாக கடந்த 2021 ஆம் ஆண்டே, அதாவது நாடாளுமன்றத்தால் அணைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வரும் வரை தான் முல்லைப் பெரியாறு அணையை மேற்பார்வையிடும் மேற்பார்வை குழுக்களுக்கு உயிர் இருக்குமே தவிர, அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வரும்போது மேற்பார்வை குழுக்கள் தானாக கலைந்து விடும் என்றும் அறிவுறுத்தி இருந்தது நாமெல்லாம் எதிர்பாராத ஒன்றுதான்.

அக்டோபர் ஒன்றாம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், முல்லைப் பெரியாறு அணையை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமானால்…தமிழகத்திற்கு அங்கு எந்த வேலையும் இருக்கப் போவதில்லை. ஏற்கனவே அணைகள் மீது நாம் கொண்டிருந்த உரிமைகளை கடந்த 1979 ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக இழந்து வந்த நாம்,இப்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒட்டுமொத்தமாக இழக்க இருக்கிறோம்.

வழக்கம்போல் நாங்கள் ஒரு போராட்டத்தை லோயர் கேம்பில் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடத்துவோம். அழுவோம், புலம்புவோம், ஒப்பாரி வைப்போம். துறைக்கு அமைச்சரான துரைமுருகன் நடிகர்களுக்கு பதில் சொல்வதிலேயே தன்னுடைய காலத்தை கழிக்க போகிறாரே தவிர,அணை குறித்து எந்த உருப்படியான யோசனையையும் அவர் ஒருபோதும் முன் வைக்கப் போவதில்லை.

ஐந்து மாவட்டத்திலும் உள்ள உணர்வுள்ள பெரியாறு பாசன விவசாயிகள் வீதிக்கு வராத வரை, இந்த துயரம் நீடிக்க தான் செய்யும். விரைவில் தமிழகத்திற்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை தன் கைவசம் எடுத்துக் கொள்ளப் போகும் சர்வாதிகார அமைப்பான அணைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு எதிராக விரைவில் களத்தில் இறங்குவோம்.

கூடுதலாக அக்டோபர் ஒன்றாம் தேதி, தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசன விவசாயிகள் அனைவரும், தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு நம்முடைய வன்மையான கண்டனங்கள்.

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு சென்றிருக்கும் 39+1 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நமது ஆழ்ந்த அனுதாபங்கள். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் பெரியாறு அணைக்குள் நுழைந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top