Close
நவம்பர் 24, 2024 5:17 மணி

வட இந்தியர்களால் பறிபோகிறதா தமிழக வேலைவாய்ப்பு..? எதிர்காலம் என்னாகும்..?

கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் (கோப்பு படம்)

பரவலாகவே தமிழகம் முழுவதும் இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களைப்பற்றி பான்பராக் வாயர்கள், படிக்காதவர்கள், அறிவில்லாதவர்கள், மதவெறியர்கள் என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

முதலில் நம்மைப் பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம். ஒரு பக்கம் வேலை இல்லாத் திண்டாட்டம். இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்ற புலம்பல்.

எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தி. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல். பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன.

எங்கு பார்த்தாலும் “எந்த பிசினசும் சரியில்லைங்க” என்ற சலிப்பான பேச்சுகள் என தொடர்கின்றன. இதற்கு நடுவில் கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலையிழந்தோர் பல லட்சம் பேர் என பல துன்பங்களில் உழன்று வருகிறோம்.

இதற்கு பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை நமக்கு தெரிந்தவகையில் பார்க்கும்போது இவைகளும் காரணமாக இருக்கும்.

மது என்னும் சமூக சீர்கேடு

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரணமான ஒன்றாகிவிட்டது. தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் பலர் உள்ளனர். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகாரர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது. குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட நேரம் வரை வேலை செய்ய முடிவதில்லை. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை.

கடுமையாக உழைக்க நமது மக்கள் தயாராக இல்லை. கட்டுமான வேலைகளுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கூலி கேட்கின்றனர். வீட்டுக்கு 500, தனக்கு மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 500 என்று தினமும் குடிக்கிறார்கள். கேட்டால் வேலை கஷ்டம். உடல் வலி என்று மொக்கையான பதிகள் வேறு. இப்படி தினமும் குடிப்பதால் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, சமூகத்தில் முறையற்ற உறவுகள் பெருகுவதும், இதனால் தாய் தந்தையின் கவனிப்பு இல்லாமல் குழந்தைகள் சமூக விரோதிகளாக உருவாகும் மிகப்பெரிய அவலமும் ஏற்படுகிறது.

மின்வெட்டால் காணாமல்போன சிறு,குறு தொழில்கள்

2009-11ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் நிலவிய மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து போயின. அவர்களில் பலர் தொழிலை கைவிட்டு வெளி மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்தனர்.

சிலர் மாற்று வேலைகளுக்கு சொற்ப சம்பளத்தில் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிலர் கவலையில் குடி நோயாளிகளாகி விட்டனர். மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உள்ளனர்.

நூறுநாள் வேலைத்திட்டம் 

இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை. ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம்.

வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்.. வேறு எந்த வேலையும் இல்லை. 250 ரூபாய் அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறு நகரங்களுக்கு வேலைக்கு சென்றவர்களும் இந்த நூறுநாள் வேலைக்குச் செல்லாத தொடங்கிவிட்டனர். அதனால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் கூட கீழ்நிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது.

அரசு வழங்கும் இலவசங்கள் :

அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாகி விட்டது. அது மிகப்பெரிய சமூக சீர்கேடு. உழைக்காமல் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற மனநிலை வந்துவிட்டால், இந்த சமூகம் எந்த காலத்திலும் எழுந்துநிற்க முடியாத தள்ளாட்ட சமூகமாக மாறிப்போகும்.

நமது கல்விமுறை

நமது கல்விமுறை இன்னும் மெக்காலே கல்விமுறையாகவே தொடர்கிறது. பட்டதாரிகளை உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை. அந்த கல்வி வாழ்க்கைக்கான கல்வியாக இல்லை. ஒரு இயந்திரவியல் பட்டதாரிக்கு நிர்வாகமும் தெரிந்திருக்கவேண்டும்.

இந்த சமூகத்தில் ஒவ்வொருவருடனும் எப்படி பழகவேண்டும்? பெரியவர்களுக்கு எப்படி மரியாதை தரவேண்டும் என்கிற சராசரி குடிமகனின் சமூகம் சார்ந்த வாழ்க்கை குறித்தும் அவர்கள் கற்றிருக்கவேண்டும் அல்லது கற்பிக்கப்படவேண்டும்.

சவால்களை எதிர்கொள்ளத்தெரியாத வெற்றுப் பட்டம் இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன?

வடநாட்டவரை தேடும் தொழில் நிறுவனங்கள்

தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோர் வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். ஓட்டல் முதல் கட்டுமானத் துறை வரை இதுதான் நடக்கிறது.

தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுனர்கள் ஒருநாளைக்கு பெறும் ரூ.850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட வடநாட்டவர்கள் 2 மணிநேரம் அதிகமாக ரூ.500-600 சம்பளத்தில் செய்கிறார்கள்.. தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்.

நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை. சொல்லப்போனால் இங்கு உள்ள 100சதவீத பானிபூரி வண்டிகளில் 30சதவீதம் கூட வட இந்தியர்களுடையதல்ல.. 70சதத்துக்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்.

மோசமான மனநிலை மாற்றம்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலையே செய்யாமல் சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணும் மாற்றங்கள்.

தடுமாறும் இளைஞர்கள்

ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்த காலம்போய் இன்று ஆசிரியர்களை அடிக்கும் நிலைக்கு மாணவர்கள் உயர்ந்துள்ளார்கள். இது வேதனையான நிலை. இந்த சமூகத்தில் ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்காத மாணவன் எப்படி உயர்வான்? சட்டமும் மாணவனுக்கு சாதகமாகவே உள்ளது.

நம் முன்னோர் கூறியபடி ‘அடியாத பிள்ளை படியாது’. என்பது எவ்வளவு பெரிய உண்மை? நமது முன்னோர்கள் ஒன்று முட்டாள்கள் இல்லை. அவர்கள் கூறிவைத்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளிலும் பொருள்பொதிந்து உள்ளது.

அப்படியான மாணவன் வளர்ந்தபின் நடிகர்களின் பின்னால் கொடி தூக்கித் திரிகிறான். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் இளைஞர்களே. அவர்கள் அறிவார்ந்த கூட்டமாக இருந்தால் மட்டுமே நாடு தூக்கத்தில் இருந்து விழிப்படைந்து எழும்.

அரசும் கற்றறிந்த சான்றோரும் மக்களின் மனநிலையை மாற்றுவதற்கும் நமது நாட்டின் நலனுக்காக இளைஞர்களின் எதிர்காலம் செழிக்கவும் ஒரு மாற்றுவழி தேடவேண்டும். ஒரு இளைஞன் முதலில் தன்னை உணர்தல் வேண்டும். அந்த ‘நான்’ என்பதை உணர்பவன் ஆளுமைமிக்கவனாக உயர்வான். அதற்கு ஒரு வழி காட்டுங்கள்.

தமிழகம் முழுவதும் முக்கிய ஓட்டல்களில் தோசை மாஸ்டர், டீ மாஸ்டர் என்று எல்லோருமே வட நாட்டவர். மாதம் அவர்கள் ரூ.10 ஆயிரம் வீட்டுக்கு அனுப்புவதாக கூறுகின்றனர். அதாவது நமது தமிழ்நாட்டு பணியாளருக்கு கிடைக்கவேண்டிய சம்பளம் மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்குப் போகிறது.

ஒருவர் மாதம் 10,000 அனுப்புகிறார் என்றால் தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள். பல ஆயிரம் கோடி வேறு மாநிலத்துக்கு செல்வதை எண்ணிப்பாருங்கள்.

திருப்பூரில் மூன்று, கோவையில் ஏழுலட்சம் பேரும், சென்னையில் இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என்று தோராயமாக கணக்கு கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசிடம் கூட வட மாநிலத்தவர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கு சரியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

தினமும் ஆயிரக்கணக்கில் ரயிலில் வந்து இறங்கியவண்ணம் இருக்கிறார்கள். இதற்கு முன்பு முக்கிய நகரங்களில் மட்டும் இருந்தவர்கள் இன்று தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறார்கள். மெல்ல மெல்ல தமிழர்கள் வேலை பறிபோய்க்கொண்டு இருக்கிறது. இப்படியே போனால் தமிழகமே அவர்கள் கைகளுக்குப் போய்விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

உழைக்க மனமின்றி சோம்பேறியாகும் நமது மக்களின் எதிர்கால பொருளாதார நிலை எப்படி இருக்கும்..?

பயிர்த்தொழிலும் கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. களை எடுத்தல், அறுப்பு அறுத்தல் , மருந்து அடித்தல் என விவசாய பணிகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். வேலை கொடுப்பவருக்கு குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பு கிடைக்கிறது. அவர்களும் உழைக்கத் தயாராக இருக்கின்றனர். அதனால் வேலை கொடுப்பவர்களுக்கு லாபம். நாமோ உழைக்கப்பயந்து ஏமாற்றுகிறோம்.

எப்போது விழிப்பு ஏற்படும்…..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top