Close
செப்டம்பர் 19, 2024 8:55 காலை

கேரளாவில் இருந்து முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக எழும் ஒற்றைக்குரல்..!

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் (கோப்பு படம்)

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக பிரபல மெட்ரோ மேன் ஸ்ரீதரன் கருத்து தெரிவி்த்துள்ளார். முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை தேவையில்லை. இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் சிறு பராமரிப்பு கூட தேவைப்படாத அளவு அணை பலமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

கேரள நாட்டிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். உச்சநீதிமன்ற நீதி அரசராக இருந்த கேரளாவை சேர்ந்த கே.டி.தாமஸ், முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு பேட்டியில் சொல்லும் போது,  அணைக்கு கீழே எனக்கு ஐந்து ஏக்கர் நிலம் கொடுங்கள். நான் அங்கேயே வீடு கட்டி விவசாயம் செய்யப்போகிறேன். அப்போதாவது மலையாள நாட்டு மக்கள் முல்லை பெரியாறு அணை மீது அச்சம் கொள்ளாதிருப்பீர்களா? என்று வினா எழுப்பினார்.

அதுபோல தன்னுடைய படைப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா தமிழகத்தின் இரண்டாவது நம்பிக்கை. தமிழ்நாட்டுக்காரன் நமக்கு காய்கறி தருகிறான், பால் தருகிறான், நாம் உண்ணும் எல்லாமும் அவன் தான் கொடுக்கிறான். பொய்யான தவறான தகவல்களை கூறி, தமிழர்கள் வயிற்றில் அடிக்கலாமா என்று வினா எழுப்பினார்.

உணவு தருபவனின் வயிற்றில் அடிக்கக்கூடாது என்று சொன்ன எழுத்தாளர் பால் சக்கரியாவின் வீடு, அடுத்த நாள் கேரளத்து இடதுசாரி கூலிப்படையால் அடித்து நொறுக்கப்பட்டது.

பால் சக்கரியாவுக்கு அள்ளிக் கொடுக்க எனக்கோ, இந்த சங்கத்திற்கோ பொருளாதார பலம் இல்லை என்பதால், எங்கள் எழுத்தாளனை நாங்கள் அம்போவென்று விட்டு விட்டோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.

அதற்குப் பிறகு கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக எந்த குரலும் எழாத நிலையில்,

திடீரென டெல்லி மெட்ரோவை உருவாக்கியவரும், உலகப் புகழ்பெற்ற கொங்கன் ரயில்வேயின் திட்ட இயக்குநருமான மெட்ரோ மேன் ஸ்ரீதரன் களத்திற்கு வந்தது, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாவில் கிளம்பி இருக்கும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மெட்ரோ மேன் ஸ்ரீதரன், முல்லைப் பெரியாறு அணை குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இன்னும் 50 ஆண்டுகளுக்கு எவ்வித பராமரிப்பு பணியும் அங்கு தேவையில்லை எனும் அளவிற்கு அணை பலமாகவே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சவாலான கொங்கன் ரயில்வே திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் காட்டிய மெட்ரோ மேன் ஸ்ரீதரனின் இந்த கருத்துக்கு கேரளாவில் பலத்த ஆதரவு எழுந்திருக்கிறது என்பதோடு, அவர் பேசிய இடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோழிக்கோடு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மூன்று பேரில் யாரையும் தமிழகம் இதுவரை கொண்டாடவில்லை.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பென்னிகுயிக் பாலசிங்கம், கேரளாவில் இருந்து கொண்டே நியாயத்தையும் பேச துணிவுடன் முன்வருபவர்களை தமிழகம் கொண்டாட வேண்டும். ஏற்கனவே இருவர் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இப்போதும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தமிழகத்திற்கு ஆதரவாக வலுவான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இது எங்களின் நெஞ்சங்களை நிறைத்துள்ளது. இவர்களை தமிழக விவசாயிகள் கொண்டாட வேண்டும்.

ஆனால் தமிழகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதி அரசரும், 1956 மொழிவழி பிரிவினையின் போது, தமிழக எல்லைகளை கேரளாவின் பக்கம் கொண்டு போய் சேர்ப்பதில் முன்னணியில் இருந்தவருமான, வி.ஆர். கிருஷ்ணய்யர், கடந்த 2011 ஆம் ஆண்டு இதே முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கொச்சியில் நடந்த 8 மணி நேர மனிதச் சங்கிலியில் தன்னுடைய தள்ளாத வயதிலும் பங்கேற்றவர் என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

வாழ்க மெட்ரோ மேன் மரியாதைக்குரிய ஸ்ரீதரன் ஐயா’ இவ்வாறு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top