புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி, மங்களாகோவில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (30.08.2024) மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது முதலமைச்சர் பொதுமக்களுக்கு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பதிவு செய்திடும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்”என்ற புதிய திட்டத்தை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் 18.12.2023 -ல் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்திடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 495 கிராம ஊராட்சிகளில் 66 ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி, மங்களாகோவில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டது.
எனவே பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது தொடர்புடைய அரசு அலுவலர்கள் உரிய பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர், சிவ.வீ.மெய்ய நாதன் , கந்தர்வ கோட்டை ஊராட்சி ஒன்றியம், அண்டனூர் ஊராட்சி, மஞ்சம்பட்டி முத்துமாரி யம்மன் கோவில் அருகில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கினையும், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய பயணியர் நிழற் குடையினையும், ஆதிதிராவிடர் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், திருக்கட்டளை ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினையும் திறந்து வைத்தார். மேலும், கல்லாக்கோட்டை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், கந்தர்வக் கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், கந்தர்வக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா.ரெத்தினவேல், மங்களாபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பரமசிவம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.