புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள லெனின்நகர் குடியிருப்பை இடிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள லெனின் நகரில் சுமார் 60 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். தாங்கள் வசிக்கும் இடத்திற்கு வீட்டு ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு என அனைத்தையும் அரசிடம் இருந்து பெற்றுள்ளனர். இப்பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்குச் சொந்தமான அலுவலகங் களும் இப்பகுதியில் உள்ளன.
இந்நிலையில், மேற்படி இடம் விநாயகர் கண்மாய் என்றும், நீர்ப்பிடிப்புப் பகுதி என்றும் கூறி மேற்படி வீடுகளை இடிப்பதற்கு வருவாயத் துறை யினரும், நீர்வளத்துறை அதிகாரிகளும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தக் கண்மாய்கு நீர் வரத்தோ, சாகுபடி நிலங்களோ இல்லை. அந்த இடங்களில் கட்டிடங்களாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
லெனின் நகரில் வசித்து வரும் அனைவரும் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்துபவர்களாகவும், வேறு இடத்தில் வாடகைக்கோ, சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டும் அளவுக்கு வசதி, வாய்ப்புகளோ இல்லாத காரணத்தால் மேற்படி இடத்தை இடிக்கக் கூடாது எனவும், அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கே வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் திருமயத்தில் திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டாத்தில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார்.
அவர் பேசும்போது,பேருந்துநிலையம் அருகில் பட்டியலின மக்கள் வசிப்பது சிலருக்கு உறுத்துகிறது.50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் லெனின் நகர் குடியிருப்பை அப்புறப்படுத்த அதிகாரிகள் துடிக்கின்றனர். லெனின் என்ற பெயரைக் கேட்டாலே அதிகார வர்க்கம் நடுங்குகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமத்துவபுரத்தை உருவாக்கினார். லெனின் நகரில் இயல்பாகவே அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். கலைஞரின் வழிவந்த மு.க.ஸ்டாலின் அரசு சமத்துவபுரமாக உள்ள லெனின் நகரை இடிக்க முயல்வது நியாயமா?
நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என அதிகாரிகள் கைவிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்ற உத்தரவுகளையும் எதிர்த்து தமிழ்நாட்டில் பல இடங்களில் ஏழை மக்களின் குடியிருப்புகளை இடிக்கவிடாமல் தடுத்த வரலாறு செங்கொடி இயக்கத்திற்கு உண்டு.
இந்த லெனின் நகரில் 18 விதவைப் பெண்கள் வசித்து வருகின்றனர். தாய், தந்தையரை இழந்து ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளும் வசித்து வருகின்றனர். லெனின் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. பட்டியலின மக்களும், ஏழை, எளிய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஊரின் மையப் பகுதியில், பேருந்து நிலையம் அருகில் வசிப்பது சிலரின் கண்களை உறுத்துகிறது. அவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரண மாகத்தான் அதிகாரிகள் லெனின் நகரை இடிப்பதற்குத் துடிக்கின்றனர்.
தற்பொழுது அதிகாரிகள் மாற்று இடம் குறித்து என்னிடம் பேசி வருகின்றனர். எங்களைப் பொருத்தவரை பயன்பாடற்ற நீர்நிலைப் புறம்போக்காக இருந்துவரும் லெனின்நகர் பகுதியை வகைமாற்றம் செய்து அவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். மாற்று யோசனைகளை நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை. என்ன விலை கொடுத்தும் லெனின் நகர் குடியிருப்பு வீடுகளை இடிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார் எம்எல்ஏ சின்னதுரை.
ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், விதொச மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் துரை.நாராயணன், திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, பொருளாளர் ஜெ.வைகைராணி, விவசாயிகள் சங்க ஒள்றியச் செயலாளர் வீரமணி விசிக ஒன்றியச் செயலாளர் வீரமணி, தொகுதி செயலாளர் ரமேஷ், மருத்துவர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திருமயம் வட்டாட்சியரிடம் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் மேற்படி லெனின் நகர் குடியிருப்பை இடிகக்கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், சு.மதியகழன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பழனிவேல், ஆரோக்கியசாமி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.