Close
நவம்பர் 22, 2024 11:16 காலை

ஓட்டல்ல சாப்பிடுறீங்களா..? ஜாக்கிரதைங்க..!

புரோட்டா கடை (கோப்பு படம்)

பல ஓட்டல்களில் இந்தத் தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. பொதுமக்கள் கவனமாக ஓட்டல்களை தேர்வு செய்து, நம்பிக்கை மிகுந்த இடங்களில் மட்டும் உணவு சாப்பிட வேண்டும் என்பதற்கான ஒரு விழிப்புணர்வு பதிவு.

நம்ம ஊர் ஓட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று கடைக்காரர்கள் சிலர் கூறிய தகவல்களை பார்க்கலாம்.

பஞ்சுபோன்ற இட்லி ரெடி

இட்லி: பொதுவா மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும்.அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க?

கோப்பு படம்

கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா…

எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க.

நல்ல சோறு எப்படி இருக்கும்?

சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே… அதுக்காகத்தான் பெரும்பாலான ஓட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க.

அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது.

ரோட்டுக்கடை புரோட்டா

புரோட்டா: பல ரோட்டுக் கடை ஓட்டல்களில் மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஓட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

சுவைமிகு புரோட்டா சால்னா ??

சால்னா: சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க.

பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. ‘ஓட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி.

 

கோப்பு படம்

ஆட்டுத்தலை??

ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க…தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம் தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம்.

செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டு தான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம்.

ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான். எல்லாத்தையும்விட முக்கியம்,

கலப்பட மளிகை

ஓட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப்படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க.

மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத்தூள், குதிரை சாணத்தையும் கலக்கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க. சாதாரண ஹோட்டல்களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னையில் பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்.

இங்கு கூறப்பட்டுள்ள கலப்பட மற்றும் சுகாதாரமற்ற உணவு தயாரிப்பு எல்லா உணவகங்களுக்குமானது அல்ல. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க இது ஒரு விழிப்புணர்வு செய்தி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top